இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வருகிறார். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் தோல்வியை சந்தித்த இந்தியா முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
அதை விட ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை விராட் கோலி பரிசளித்தது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் முடிவை எடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
ராயுடு ஆதரவு:
இந்நிலையில் விராட் கோலி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 81 சதங்கள் அடித்து மிகப்பெரிய அனுபவத்தைக் கொண்டுள்ளதாக முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எனவே அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டிய அவசியமில்லை என்று ராயுடு குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்ல மரியாதையும் நம்பிக்கையும் கொடுத்தால் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விடுவார் என்றும் ராயுடு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது பின்வருமாறு. “தற்போது விராட் கோலிக்கு ரஞ்சிக் கோப்பை தேவையில்லை. 81 சதங்கள் அடிப்பதற்கு போதுமானதாக இருந்த அவருடைய டெக்னிக் முன்னோக்கி செல்வதற்கும் நன்றாகவே இருக்கும். யாரும் அவரை வலுக்கட்டாயமாக விளையாட வைக்க வேண்டியதில்லை. அவரும் வலுக்கட்டாயமாக விளையாட வேண்டியதில்லை”
நெருப்பு மீண்டும் பற்றும்:
“அவர் அனைத்தைப் பற்றி நன்றாக உணர வேண்டும். அவருக்குள் இருக்கும் நெருப்பு மீண்டும் தாமாகவே பற்றிக் கொள்ளும். அடிப்படையில் அவர் மீது மரியாதையும் நம்பிக்கையும் வையுங்கள். அனைத்தையும் தாண்டி அவரை தனியாக விடுங்கள்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.
இதையும் படிங்க: 2 மணி நேரத்துக்குள் 2 முறை.. சந்திமலை மடக்கி இலங்கையை வீழ்த்திய லயன்.. அஸ்வினை முந்தி உலக சாதனை
அந்தத் தொடரில் அவர் ஃபார்முக்கு திரும்ப முயற்சிக்க உள்ளார். அதற்கு அடுத்தபடியாக துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் அவர் விளையாட உள்ளார். இந்தியா அந்தக் கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி மட்டுமின்றி கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.



