இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் துவங்கியுள்ளது. அந்தத் தொடரில் லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அப்போட்டியில் பேட்டிங்கில் 5 சதங்களை அடித்து இந்தியா வரலாறு காணாத சாதனையை படைத்தது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கத் தவறினார்கள்.
அதன் காரணமாக வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்தது. அந்தத் தோல்விக்கு 7 கேட்சுகளை இந்தியா தவற விட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடிய ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை விட்டது ரசிகர்களை கடுப்பேற்றியது.
தவறிப் போக காரணம்:
அதன் காரணமாக முதல் போட்டியிலேயே சதத்தை அடித்தும் தோல்விக்குக் காரணமான அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டித் தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் டுக் பந்துகளை வைத்து இந்திய அணி ஃபீல்டிங் பயிற்சிகளை செய்வார்கள் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். அப்போது காயங்களைத் தவிர்ப்பதற்காக இந்திய வீரர்கள் கைகளில் டேப்பை ஒட்டிக்கொள்வது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் காரணமாக பந்து அதில் பட்டு நழுவிச் செல்ல அதிக வாய்ப்பு ஏற்படும் என்றும் கைப் கூறியுள்ளார். அதே போல முதல் இன்னிங்ஸில் சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் கையில் சந்தித்த லேசான காயத்திற்காக டேப் ஒட்டியிருந்தார். அதுவே இங்கிலாந்தில் இதற்கு முன் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிராத அவர் 4 கேட்ச்களை தவற விட காரணம் என்றும் ஃகைப் தெரிவித்துள்ளார்.
ஃகைப் விளக்கம்:
இது பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெய்ஸ்வால் ஏன் கேட்ச்களை தவற விட்டார்? ஏனெனில் டுக் பந்துகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்யும் நாம் காயத்தை சந்திக்கும் போது பட்டை (பாதுகாப்பு டேப்) போட்டுக் கொள்வோம். அதை அணியும் போது விரல்கள் சிக்கிக் கொள்ளும். சுதந்திரமாக நகர்த்த முடியாது”
இதையும் படிங்க: யார் இதை வெளியே சொல்லச் சொன்னா? இங்கிலாந்து பிட்ச் உருவாக்கி இந்தியாவை சாய்ப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா
“அது போன்ற சூழ்நிலையில் உங்களால் கேட்ச்களை பிடிக்க முடியாது. ஏனெனில் அந்தப் பட்டை ஸ்பான்ச் போல மாறி விடும். அதனால் பந்து அதன் மீது பட்டு பவுன்ஸாகி செல்லும் என்பது அதைப் பயன்படுத்துவதில் இருக்கும் பெரிய பின்னடைவாகும்” என்று கூறினார். முன்னதாக யாருமே வேண்டும் என்று கேட்ச்களை தவற விட மாட்டார்கள் என்று ஜெய்ஸ்வாலுக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது.



