
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா வைட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அப்படியே ஆஸ்திரேலிய மண்ணில் தோல்வியை சந்தித்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் காவாஸ்கர் கோப்பையையும் கோட்டை விட்டது.
அந்தத் தோல்விக்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். மறுபுறம் உலகளவில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வரும் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியில் இன்றியமையாத வீரராக வலம் வருகிறார். மேலும் ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் கேப்டனாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு நேர கேப்டனாக நியமிப்பது அவருடைய காயத்தை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2021இல் காயத்தை சந்தித்த பும்ரா மீண்டும் குணமடைய இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதை மறக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுல் அடுத்த கேப்டனாக தகுதியானவர்கள் என்று ஃகைப் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா வருங்காலங்களில் கேப்டன்ஷிப் பொறுப்பை எடுத்துக் கொள்ள மாட்டார். ரோஹித் சர்மாவுக்கு பின் அவர் கேப்டனாக வருவது சரியான ஐடியா கிடையாது”
“ஏனெனில் தற்சமயத்தில் அவர் மட்டும் தான் ஒட்டுமொத்த பாரத்தையும் சுமந்து கொண்டு மற்ற பவுலர்களிடம் குறைவான ஆதரவை பெற்றுக்கொண்டு முழு மூச்சுடன் அணிக்காக பவுலிங் செய்கிறார். அதுவே தற்சமயத்தில் அவர் காயத்தை சந்திப்பதற்கும் ஒரு காரணமாகும். அவர் இவ்வாறு காயத்தை சந்திப்பது இது முதல் முறையும் அல்ல. எனவே பும்ரா கேப்டனாக வேண்டும் என்று நான் நம்பவில்லை”
இதையும் படிங்க: இந்த கடைசி வாய்ப்பையும் ரோஹித் பிடிக்கலன்னா.. பும்ரா தான் கேப்டன்.. கோலிக்கும் வாய்ப்பிருக்கு.. கில்கிறிஸ்ட்
“ரிஷப் பண்ட் அல்லது கேஎல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன் கேப்டனாக விரும்புவதை நான் விரும்புகிறேன். அவர்கள் ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்துள்ளார்கள். எனவே அவர்களில் ஒருவர் கேப்டனாக செயல்படலாம்” எனக் கூறினார். அடுத்ததாக ஜூன் மாதம் தான் இங்கிலாந்து மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு சில மாதங்கள் இருப்பதால் புதிய கேப்டன் யார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.