
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியிலிருந்து சென்னை வாங்க மீண்டும் முயற்சித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோரை தருமாறு ராஜஸ்தான் நிபந்தனை விதித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சாம்சன் வேண்டுமெனில் ஜடேஜாவை கண்டிப்பாக தரவேண்டும் என்று ராஜஸ்தான் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது. ஏனெனில் 2012 முதல் சென்னைக்காக விளையாடி வரும் ஜடேஜா 2018, 2021, 2023 ஆகிய 3 கோப்பைகளை தோனி தலைமையில் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
குறிப்பாக 2023 ஃபைனலில் கைமீறிய வெற்றியை அவர் பெற்றுக் கொடுத்ததை மறக்கவே முடியாது. எனவே அவரை சிஎஸ்கே அணியிலிருந்து விடக்கூடாது என்று சென்னை ரசிகர்களே சமூகவலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வருங்கால நன்மைக்காக ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு தியாகம் செய்ய எம்.எஸ். தோனி தயாராக இருப்பார் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை பொறுத்த வரை அணியை வெற்றி பெற வைப்பது மிகப்பெரிய இலக்கு. ஒருவேளை 2026இல் அவர் மீண்டும் விளையாட வந்தால் 2025இல் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்ததை பற்றி சிந்தித்துப் பார்ப்பார். பெருமைக்கு மதிப்பளிக்கக் கூடிய அவர் சிஎஸ்கே மற்றுமொரு கோப்பையை வெல்வதை மிகப்பெரிய லட்சியமாக கொண்டிருப்பார்”
“ஒரு அணி ஒருவரை மட்டும் அடிப்படையாக வைத்து கோப்பையை வெல்ல முடியாது. ஒருவேளை அணியின் நன்மைக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டுமெனில் அதை தோனி செய்வார். தோனி நட்பின் அடிப்படையில் எக்ஸ்ட்ரா வாய்ப்புகள் வழங்கி அணியை இயக்குவார் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் அதற்காக வெற்றியின் மேலிருக்கும் கவனம் சிதறிவிடும் என்று அர்த்தமல்ல”
“சிஎஸ்கே சாம்பியனாக வேண்டும் என்பதே முதன்மை இலக்கு. எனவே ஜடேஜாவை கொடுத்தால் அணிக்கு நல்ல ஆப்ஷன் கிடைக்குமெனில் தோனி அந்த முடிவை எடுப்பார். சாம்சன் சென்னைக்கு வருவதற்கு முன் அவர்களுடன் மொபைலில் நிறைய பேசியிருப்பார். குறிப்பாக தோனியிடம் நிலைமையைப் பற்றி பேசியிருப்பார். பொதுவாக சிஎஸ்கே அணியை தோனி நடத்துகிறார்”
இதையும் படிங்க: பாண்டிங் மாதிரி தரமான கோலி டெஸ்டில் ரிட்டையரானது நல்லது.. அதுல ஃபோகஸ் பண்ணுவாரு.. ஆண்டி பிக்கேல்
“ஒருவேளை சிஎஸ்கே சாம்சனை விரும்பினால் அவர் அவர்களது வருங்கால கேப்டனாகவும் வாய்ப்புள்ளது. அதனால் 2026 தோனிக்கு கடைசி வருடமாக இருக்கும். 2012 முதல் விளையாடும் ஜடேஜாவை காட்டிலும் சாம்சனை சிஎஸ்கே ஏன் விரும்புகிறார்கள்? ஏனெனில் ராகுல், ரிஷப் பண்ட்டை ஆகியோரைக் காட்டிலும் சாம்சன் பேட்டிங் ஸ்டைல் சென்னை அணிக்கு பொருந்தும். 3, 4வது இடத்தில் விளையாடக்கூடிய அவரால் மிடில் ஆடரிலும் சிக்ஸர்கள் அடிக்க முடியும்” என்று கூறினார்.