இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அதற்கு முன் அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.
அதனாலேயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்ற இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்தது.
பாண்டிங் போல கோலி:
அந்த வெற்றிக்கு ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121*, விராட் கோலி 73* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர். அதனால் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சில வருடங்களுக்கு முன்பாகவே ஓய்வு பெற்றது நல்ல விஷயம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆண்டி பிக்கேல் தெரிவித்துள்ளார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்தி 2027 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை விராட் கோலி பெறுவார் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் போல விராட் கோலியும் தரமான வீரர் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பிக்கேல் பேசியது பின்வருமாறு.
2027 உ.கோ வாய்ப்பு:
“விராட் கோலி மிகவும் ஃபிட்டானவர் என்பதால் நன்றாகச் செல்வார். அதே சமயம் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார். ஆர்சிபி அணி கடந்த ஐபிஎல் தொடரை வென்றதால் அவர் அடுத்தடுத்த கோப்பைகளை வெல்வதற்கான முயற்சிகளை எடுப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியே வந்தது முழுமையாக 50 ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுக்கும் என்று நான் கருதுகிறேன்”
இதையும் படிங்க: முதல் தெ.ஆ டெஸ்ட் போட்டிக்கான இந்திய லெவன் இது தான்.. 6இல் அந்த 2 பேருக்கு போட்டி.. பார்திவ் பட்டேல்
“அவர் தம்முடைய அணிக்கு நல்ல ரன்கள் அடித்துக் கொடுத்தால் உங்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ரன்களே அவருடைய பணம். எனவே களத்துக்குச் சென்று தொடர்ச்சியாக ரன்கள் அடித்தால் அவரால் 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியும். அவர் எனக்கு எப்போதும் ரிக்கி பாண்டிங்கை நினைவுபடுத்துவார். ரிக்கியை போலவே விராட் கோலியும் ஆட்டத்தை முன்னோக்கி எனர்ஜிடிக்காக எடுத்துச் செல்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கும்” என்று கூறினார்.



