
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் 20 ஓவரில் மிகவும் மோசமாக விளையாடிய சென்னை 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதே ரன்களை கொல்கத்தா வெறும் 10.1 ஓவரில் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அந்தளவுக்கு மோசமாக விளையாடிய சென்னை தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றுள்ளது. அத்துடன் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இத்தனைக்கும் ருதுராஜ் காயத்தால் விலகியதால் 5 கோப்பைகளை வென்ற தோனி மீண்டும் கேப்டனாக செயல்படத் துவங்கியுள்ளார்.
அவருடைய தலைமையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இங்கிருந்து சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் 200 ரன்கள் அடிப்பதற்கு பெயர் போன சிஎஸ்கே அணி தற்போது 150 ரன்கள் அடிப்பதற்கே திண்டாடி வருகிறது.
மேலும் 2019க்குப்பின் 11 போட்டிகளில் 180+ ரன்களை சேசிங் செய்ய முடியாமல் சென்னை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மொத்தத்தில் தோனி தலைமையில் ஒரு காலத்தில் சிங்கம் போல மிரட்டிய சென்னை அணி தற்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் இப்படி சிஎஸ்கே விளையாடும் விதத்தை பார்க்க முடியவில்லை என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
எனவே சிஎஸ்கே அணிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்சி புதிய வருங்காலத்தை உருவாக்குவதற்காக தோனி ஓய்வு பெற வேண்டும் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். அதற்கு இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் சேப்பாக்கத்தில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கி சிஎஸ்கே சொந்த ஊரில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் கைஃப் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: 5 தொடர் தோல்விகளால் கதை முடிந்ததா? 2024 ஆர்சிபி போல – சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல செய்ய வேண்டியது இதோ
“இது தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடரா? இந்த வருடம் சிஎஸ்கே விளையாடும் விதத்தை பார்க்கும் போது புதிய அணியை உருவாக்குவதற்கான மாற்றத்தை செய்ய இதுவே சரியான நேரமா? என்னுடைய கடைசி கேள்வி என்னவெனில் எதிரணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற ஸ்பின்னர்கள் இருக்கும் போது ஏன் சொந்த ஊரில் சிஎஸ்கே ஸ்லோவான பிட்ச்சை எதிரணிக்கு கொடுக்கிறது?” என்று கூறினார்.