ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதள பாதாளத்தில் திண்டாடி வருகிறது. இம்முறை முதல் போட்டியிலேயே சென்னை பரம எதிரி மும்பையை தோற்கடித்து அசத்தியது. ஆனால் அதற்கடுத்த 5 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய சென்னை தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் விழுந்துள்ளது.
அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. அதே போல மிடில் ஆர்டரில் சிவம் துபே தவிர்த்து மற்ற யாரும் பெரிய ரன்கள் குவிப்பதில்லை. கடைசியில் தோனி, ஜடேஜா ஆகியோராலும் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாததால் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே 5 தொடர்ச்சியான போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
பாதாளத்தில் சென்னை:
ருதுராஜ் காயத்தால் விலகியதால் தோனி தலைமையில் சென்னை வெற்றி பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 103/9 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை 59 பந்துகளை மீதம் வைத்து 8 விக்கெட் வித்யாசத்தில் மோசமாக தோற்றது. அதையும் சேர்த்து வரலாற்றில் முதல் முறையாக தங்களது கோட்டையான சேப்பாக்கத்தில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் சிஎஸ்கே தோற்றுள்ளது.
இங்கிருந்து சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்பது அசாத்தியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்தளவுக்கு சிஎஸ்கே அணியின் ஆட்டம் இருக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் எதுவும் கணிக்க முடியாது என்பதால் இங்கிருந்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்வதற்கு இப்போது வாய்ப்புள்ளது. அதற்கடுத்த 8 போட்டிகளில் சென்னை 7 வெற்றிகளைப் பெற வேண்டும்.
பிளே ஆஃப் செல்லுமா:
அதனால் ஏற்கனவே பெற்றுள்ள 1 வெற்றியையும் சேர்த்து மொத்தம் 8 வெற்றிகளுடன் சென்னை யாரையும் நம்பாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதே சமயம் 7 வெற்றிகளைப் பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2024இல் முதல் 7இல் 1 வெற்றியை மட்டுமே பெற்ற பெங்களூரு கடைசி 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றது.
இதையும் படிங்க: தோக்கடிச்சது மட்டுமின்றி போட்டிக்கு பின் ஆறுதலையும் கூறிய கே.கே.ஆர் – என்ன சொல்லியிருக்காங்க பாருங்க
அதற்கு நல்ல ரன்ரேட் தேவைப்படுவதால் 7 வெற்றிகளுடன் பிளே ஆஃப் செல்வதற்கு 90% மட்டுமே வாய்ப்புள்ளது. வரலாற்றில் 7 வெற்றிகளுடன் 20 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள சமயத்தில் 12 அணிகள் வெளியேறியும் உள்ளன. எனவே சென்னைக்கு 8 வெற்றியில் 100%, 7 வெற்றியில் 90% பிளே ஆஃப் சுற்று வாய்ப்புள்ளது. அதைத் தாண்டினால் 2020, 2022, 2024 போல வீட்டுக்கு கிளம்பலாம்.



