ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 செமி ஃபைனலில் இந்தியா தங்களுடைய போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. குறிப்பாக துபாயில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா குரூப் சுற்றில் ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதனால் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் முதல் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக துபாயில் மார்ச் இரண்டாம் தேதி நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 250 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, ஹர்டிக் பாண்டியா 45, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து முடிந்தளவுக்கு முயற்சித்தும் 45.3 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது.
ஜீரோ டூ ஹீரோ வருண்:
அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 2021ஆம் ஆண்டு அறிமுகமான வருண் சக்கரவர்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அறிமுக ஒருநாள் போட்டியுடன் கழற்றி விடப்பட்டார்.
இருப்பினும் மனம் தளராத அவர் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கெளதம் கம்பீர் உதவியுடன் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் அபாரமான பவுலிங் செய்த வருண் வெற்றியில் பங்காற்றினார். அதனால் கடைசி நேரத்தில் இத்தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
கைப் பாராட்டு:
இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் இதே துபாயில்1 விக்கெட் கூட எடுக்காததால் கழற்றி விடப்பட்ட வருண் தற்போது அதே மண்ணில் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வருண் சக்கரவர்த்தி என்ன ஒரு கதை. 2021 டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் அவர் விக்கெட் எடுக்கவில்லை”
இதையும் படிங்க: நியூசியிடம் அவரோட இன்னிங்ஸ் முக்கியம்.. வருண் இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்துட்டாரு.. சச்சின் பாராட்டு
“அதனால் 3 வருடங்கள் நீக்கப்பட்ட அவர் மீண்டும் இந்தத் தொடரில் துபாயில் முதல் 2 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். தற்போது தனது இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள வருண் கண்டிப்பாக செமி ஃபைனலில் விளையாடுவார். ஆஸ்திரேலியர்களை தோற்கடிக்க இந்த வாய்ப்பை இந்தியா தவற விடக்கூடாது” என்று கூறியுள்ளார்.



