2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியத்தில் தொடங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகிய 2 முக்கிய வீரர்கள் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது யாரையுமே திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
ஏனெனில் இப்போட்டிக்கு முன்பாக கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டியில் 210 ரன்களை அடித்து நொறுக்கிய இசான் கிசான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார். அதற்கு முன்பாகவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் உட்பட இந்தியாவுக்காக 2022இல் பெற்ற வாய்ப்புகளில் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒருவர் இருவர்:
தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ள அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே இலங்கைக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற போட்டியில் 112* ரன்களை விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவருடைய பேட்டிங்கை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியந்து போனது.
அதிலும் குறிப்பாக சூரியகுமார் நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் வீரர் என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். அப்படி கடைசியாக இந்தியா விளையாடிய டி20 போட்டியில் சதமடித்தவரும் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தவரும் இப்போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளது என்னால் பார்க்க முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த இருவரும் சமீப காலங்களில் தடவலாக செயல்பட்டு சுமாரான பார்மில் தவிக்கும் கேஎல் ராகுல் என்ற ஒருவருக்காக பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமாகும். முதலில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று அறிவித்துள்ள ரோகித் சர்மா ராகுல் எந்த அடிப்படையில் தேர்வாகியுள்ளார் என்று தெரிவிக்கவில்லை.
இந்த இடத்தில் தொடக்க வீரராக வாய்ப்பு பெறவிட்டாலும் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமை பெற்றுள்ள இஷான் கிசான் 4, 5 ஆகிய இடங்களில் அல்லது ராகுல் விளையாடும் அதே இடத்தில் கூட விளையாடும் வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்று மற்றொரு முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதே போல் டி20 கிரிக்கெட்டில் தெறிக்க விட்டாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் சூரியகுமார் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ராகுலை விட தற்சமயத்தில் அவர் முரட்டுத்தனமான பார்மில் உள்ளதால் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று தெரிந்தும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களில் ஒருவராக கருதப்படும் சூரியகுமார் யாதவ் பெஞ்சில் அமர்வது எந்த வகையிலும் இந்திய அணிக்கு பயனளிக்காது என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் இங்கு விஷயம் என்னவெனில் இது போல் நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் என்ன தான் அணிக்காக மகிழ்ச்சியுடன் பெஞ்சில் அமர்ந்தாலும் மனதுக்குள் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடனேயே இருப்பார்கள். அது போன்ற நிலை “என்னப்பா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தற்போதைய பார்மை குறைக்கும் அளவுக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம்.
இதையும் படிங்க: IND vs SL : நான் இஷான் கிஷானுக்கு குறைஞ்சவன் இல்ல, பதிலடியுடன் சுப்மன் கில் படைத்த சூப்பரான சாதனை இதோ
எனவே சொதப்பலாக செயல்படும் ராகுல் என்ற ஒருவருக்காக நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார், இஷான் கிசான் ஆகிய இருவருடைய திறமையையும் வீணடிக்காதீர்கள் என்று இந்திய அணி நிர்வாகத்தை ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.



