ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடத்திற்கு பின் பார்டர் காவாஸ்கர் கோப்பையை நழுவ விட்ட இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
கோப்பையை வெல்லாவிட்டாலும் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்று இந்தியா சாதனை படைத்திருந்தது. ஆனால் இம்முறை ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்தால் போதும் என்று நினைப்பதாக முகமது கைஃப் விளாசியுள்ளார்.
கைப் விளாசல்:
அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புலியாக செயல்படும் இந்தியா முக்கியமான டெஸ்ட் கிரிக்கெட்டில் எலியாக மாறியுள்ளதாகவும் அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் முன்னேறி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்கான ஆலோசனையை அவர் ட்விட்டரில் பகிர்ந்தது பின்வருமாறு. “வரும் பிப்ரவரி 23ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை தோற்கடித்தால் இதே இந்திய அணி பாராட்டுகளை பெறும்”
“அனைவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நாம் சாம்பியன் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல வேண்டிய அணியாக இருக்க நாம் விரும்பினால் அதற்கு முதலில் தரமான டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டும். அதற்கு வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் சிறப்பாக விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்”
கைப் ஆலோசனை:
“இங்கே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டும் நாம் புலியாக அசத்துகிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் திணறுகிறோம். ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நாம் உண்மையாகவே வெல்ல விரும்பினால் அதற்கு நம் வீரர்களை உள்ளூரில் சுழல், வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் விளையாட வைக்க வேண்டும். இல்லையெனில் நம்மால் அதை வெல்லவே முடியாது”
“3 – 1 என்ற கணக்கில் சந்தித்த இந்த தோல்வி நம்மை விழித்துக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்கான பாடத்தை கொடுத்துள்ளது. அது கம்பீர் தவறு மட்டுமல்ல. அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூரில் விளையாட வேண்டும். இல்லையெனில் எப்படி சிறந்த வீரர்களாக வர முடியும்”
இதையும் படிங்க: அவங்களை சில்லியாக சிதற விட்ட ஜஸ்ப்ரித் பும்ரா.. ஆஸி பவுலர்களை விட சிறந்தவர்.. பாண்டிங் பாராட்டு
“இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வேகத்துக்கு சாதகமான மைதானங்களிலும் விளையாடுவது கடினம். அதற்கு நீங்கள் நான் பயிற்சி எடுக்கவில்லையெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்ந்து உங்களை புறக்கணிக்கும். தற்போது கிடைத்த தோல்வி இந்திய அணிக்கு நல்லது. அடுத்ததாக நாம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக கடினமாக உழைக்க வேண்டும்”என்று கூறினார்.



