ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நடந்த அந்தப் போட்டியில் வங்கதேசம் 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101* (129), ராகுல் 41* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்கள்.
பந்து வீச்சில் ஷமி 5, அக்சர் படேல் 2, ராணா 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தார்கள். அந்த வெற்றிக்கு சவாலான ஆடுகளத்தில் நங்கூரமாக விளையாடி சதத்தை அடித்த கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
கில் அசத்தல்:
இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை கில் நிரப்பும் முயற்சிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணிக்குள் வந்தது முதல் சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக இருக்க முயற்சித்து வருகிறார். அவர் அந்த மரபை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சித்து வருகிறார்”
“இது அவருடைய எட்டாவது சதம். ஆனால் இது அவருடைய ஒரு மெதுவான சதம். ஆனால் அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி போட்டியை கட்டுப்படுத்தி விளையாடுவது அவசியம். அவர் தன்னுடைய அட்டாக் செய்யும் இயற்கையான ஆட்டத்துக்கு எதிராக இந்தப் போட்டியில் விளையாடினார்”
ஹபீஸ் பாராட்டு:
“அப்படி விளையாடிய அவர் வெற்றியை பெறக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 வயதிலேயே அவரைப் போன்றவர் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு நன்றாக விளையாடியது என்னுடைய இதயத்தை கவரும் வகையில் அமைந்தது. அவருக்கு எப்போது அட்டாக் செய்ய வேண்டும் எப்போது அழுத்தத்தை உள்வாங்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கிறது”
இதையும் படிங்க: பாபர் அசாம் இப்படி செய்றதை பாக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
“அவர் பெரிய போட்டிகளில் அசத்த விரும்பக்கூடிய ஒரு வீரர். அந்த வகையில் பொறுப்புடன் விளையாடிய அவர் போட்டியில் முடித்தார். அவர் போட்டியை கட்டுப்பாட்டுடன் எடுத்துச் சென்று அழகாக விளையாடினார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியை பிப்ரவரி 23ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



