ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஏனெனில் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தது.
அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடாமல் விலகியது. அதே போல ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் இந்தியா வெளியேற வேண்டும் என்ற குரல் எழுந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் இந்தியா விளையாடாது என்று விளையாட்டுத்துறை அறிவித்தது.
இந்தியா செஞ்சது தவறு:
அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளில் பாகிஸ்தானுடன் விளையாடத் தடையில்லை என்றும் இந்திய விளையாட்டுத்துறை அறிவித்தது. அதனால் எதிர்ப்பை மீறி ஆசியக் கோப்பையில் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் அப்போட்டியின் முடிவில் ஜென்டில்மேன்களாக கை கொடுக்க வந்த பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியினர் கைகுலுக்காமல் வெளியேறியது பெரிய சர்ச்சையானது.
இந்நிலையில் பாகிஸ்தானுடன் கை குலுக்காமல் இந்தியா வெளியேறியது தவறு என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஒருவேளை விருப்பமில்லை என்றால் பாகிஸ்தானுடன் ஆசியக் கோப்பையில் விளையாட இந்தியா சம்மதமே தெரிவித்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
அசாருதீன் அதிருப்தி:
“கைகுலுக்கிக் கொள்வதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் போட்டியில் விளையாடும் போது கைகுலுக்குவது உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் ஈடுபட வேண்டும். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று என்னால் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் கைகுலுக்குவதால் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: இந்தியாவின் அடியில் பாக் வீரர்களை மனநல மருத்துவரிடம் காட்டுனோம்.. ஆங்கிலமும் தெரியல.. தலைவர் பேட்டி
“நீங்கள் போராட்டத்துக்கு மத்தியில் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருமுறை நீங்கள் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டு விட்டால் முழு தீவிரத்துடன் விளையாட வேண்டும். அல்லது ஐசிசி, ஆசிய, இருதரப்பு தொடர்கள் உட்பட அனைத்து தொடர்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் விளையாடுவதற்கான எந்த அவசியமும் இல்லை” என்று கூறினார்.



