ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள். வழக்கம் போல இம்முறையும் தடை காரணமாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது சாகித் அப்ரிடி, சோயப் அக்தர் உள்ளிட்ட நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
ஆனால் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இப்போது வரை நீடிக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதால் தமக்கு வாய்ப்பு கொடுக்குமாறு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது அமீர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரை விட்டு விட்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமீர் கோரிக்கை:
சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் விளையாட முயற்சித்து வருவதாக கூறும் அவர் அடுத்த வருடம் தமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முகமது ஆமீர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் ஒருவேளை எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன்”
“ஒருவேளை வாய்ப்பு கிடைக்காவிட்டால் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவேன். அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அந்த வாய்ப்பு கிடைத்தால் ஏன் நான் விளையாடக்கூடாது? கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். இந்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி காரணமாகவே அந்த 2 தொடர்களும் ஒரே சமயத்தில் நடக்கிறது”
வாய்ப்பு கஷ்டம்:
“அடுத்த வருடம் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. பிஎஸ்எல் முதலில் நடந்தால் அதிலிருந்து என்னால் வெளியேற முடியாது. ஏனெனில் தடை விதிக்கப்படும். அதே சமயம் ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டால் அந்தத் தொடரிலிருந்தும் என்னால் வெளியேற முடியாது. அது யார் என்னை முதலாவதாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமையும்”
இதையும் படிங்க: ஆர்சிபி சின்னசாமி மைதானத்தில் ஜெய்க்க.. அந்த 2 பேர் பிட்ச்சை நல்லா படிச்சு ஸ்லோவா ஆடனும்.. கும்ப்ளே அறிவுரை
“ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டால் அதிலிருந்து என்னால் வெளியேற முடியாது என்பதால் பிஎஸ்எல் தொடரில் விளையாட மாட்டேன்” எனக் கூறினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் தருவதையும் இந்தியா தடை செய்துள்ளது. அதனால் ஆமீர் கனவு நிறைவேறுமா என்பது சந்தேகமாகும்.



