
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரஞ்சிக் கோப்பை 2025 – 26 சீசன் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் பெங்கால் – குஜராத் அணிகள் மோதிய போட்டி கொல்கத்தாவில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்கால் 279 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுதீப் கராமி 56, சுமந்தா குப்தா 63, அபிஷேக் போரேல் 51 ரன்கள் எடுத்தார்கள். குஜராத்துக்கு அதிகபட்சமாக சித்தார்த் தேசாய் 4 எடுத்தார். அடுத்து விளையாடிய குஜராத்தை வெறும் 167க்கு பெங்கால் ஆல் அவுட்டாக்கியது.
அதிகபட்சமாக சபாஷ் நதீம் 6, முகமது ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 112 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பெங்கால் 2வது இன்னிங்ஸில் 214 ரன்களை அடித்து அசத்தியது. அதிகபட்சமாக சுதீப் கராமி 54, மஜும்தார் 58 ரன்களை எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக சித்தார்த் தேசாய் 5 எடுத்தார்கள்.
இறுதியில் 336 ரன்களை துரத்திய குஜராத்தை சொந்த ஊரில் வெறும் 185 ரன்களுக்கு பெங்கால் சுருட்டியது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் சதத்தை அடித்து 109 ரன்கள் எடுத்த நிலையில் பெங்காலுக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 5, சபாஷ் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அதனால் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்கால் 2 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்தது.
அந்த 2 வெற்றிகளிலும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மொத்தம் 15 விக்கெட்டுகள் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக 2வது போட்டியில் 28.3 ஓவரில் 3, 5 என 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் பெங்கால் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்கு பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடி இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.
இருப்பினும் முழுமையாக ஃபிட்டாக இல்லையென்று சொல்லி அவரை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா (ஒருநாள்) தொடர்களில் கழற்றி விட்டார். அப்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என்று ஷமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எங்களுடைய டி20 அணியில் இருக்கும் ஒரே குறை இதுதான்.. கண்டிப்பா அதை சரி செய்வோம் – கேப்டன் அதிரடி
அதற்கு ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஷமி ஆஸ்திரேலியாவில் விளையாடியிருப்பார் என்று அகர்கர் தெரிவித்தார். அத்துடன் எதிர்த்து பேசியதால் அடுத்து நடைபெறும் தென்னாபிரிக்கா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணியிலிருந்து அவர் ஷமியை கழற்றி விட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷமி அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.