இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 285 ரன்கள் இலக்கை நியூஸிலாந்து 47.3 ஓவரில் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது.
அந்தளவுக்கு அப்போட்டியில் இந்தியாவின் பவுலிங் சுமாராக இருந்தது தோல்விக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக மிடில் ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா, ராணா போன்ற இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட்டை கூட எடுக்காதது தோல்வியைக் கொடுத்தது. முன்னதாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.
மோசமான தேர்வு:
அத்துடன் 2024 டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதே போல ஒருநாள் போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பில் அசத்தியுள்ள அவர்களுக்கு கௌதம் கம்பீர் நிலையான வாய்ப்புகளைக் கொடுப்பதில்லை. மறுபுறம் எப்போதாவது ஓரிரு போட்டிகளில் மட்டுமே அசத்தும் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா போன்ற எப்போதாவது அசத்தும் பவுலருக்கு கௌதம் கம்பீர் தொடர்பு வாய்ப்பளிப்பதை முன்னாள் வீரர் முகமது ஃகைப் விமர்சித்துள்ளார். மேலும் அவரைப்போன்ற பவுலரை வைத்துக்கொண்டு 280 ரன்களை கூட கட்டுப்படுத்த முடியாத இந்த இந்திய அணியால் 2027 உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்றும் ஃகைப் வெளிப்படையாக பாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஃகைப் சாடல்:
“நீங்கள் விக்கெட் டேக்கிங் பவுலரான அர்ஷ்தீப் சிங்கை விட்டுவிட்டு பிரசித் கிருஷ்ணாவை வளர்க்கப் பார்க்கிறீர்கள். ஓரிரு போட்டிகளைத் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா பெரும்பாலும் ரன்களை வாரி வழங்குகிறார். ஒருநாள் போட்டிகளில் 280 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கு குறைவானது என்று சொல்வதாலேயே இந்தியா வெற்றி பெறவில்லை. அப்படியானால் இந்த இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதையும் நான் பார்க்கப் போவதில்லை”
இதையும் படிங்க: காயமடைந்த சுந்தருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் சேர்ப்பு.. நியூஸி டி20 தொடரில் 2 மாற்று வீரர்களை அறிவித்த பிசிசிஐ
“சில நேரங்களில் நீங்கள் வெற்றிக்கு 15 – 20 ரன்கள் குறைவாக எடுக்கலாம். ஆனால் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல விரும்பினால் 270 – 280 ரன்களை வைத்து போட்டிகளை வெற்றி பெற கற்றுக் கொள்ளுங்கள். இலக்கு குறைவாக இருக்கும் போட்டிகளில் பந்து வீச்சை வைத்து வெற்றி பெற கற்றுக் கொள்ளுங்கள். அங்கே எப்போதும் பனி இருக்கும். எனவே நீங்கள் அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பனியை தாண்டி வெற்றி பெறும் முறையில் கவனம் செலுத்தங்கள்” என்று கூறினார்.



