எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நம்பர் 1 பந்துவீச்சாளராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தான் திகழ்வார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கூறியுள்ள கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வருண் சக்ரவர்த்தி தான் நம்பர் 1 பவுலர் :
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான அவர் அந்த தொடரின் ஒரு சில போட்டிகளில் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெகு விரைவாகவே ஓரங்கட்டப்பட்டார்.
அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கடந்த ஆண்டு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த அவர் தற்போது தனது கம்பேக்-லிருந்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியின் போது கூட அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் அடுத்த டி20 உலக கோப்பை தொடரின் நம்பர் 1 பவுலர் வருண் சக்ரவர்த்தி தான் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகவும் சரி, தற்போது இந்திய அணிக்காக அவர் கம்பேக் கொடுத்ததிலிருந்தும் சரி வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணிக்காக 29-வது வயதில் தான் அவர் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது அவர் நல்ல முதிர்ச்சியுடன் ஒரு கம்ப்ளீட் பவுலராக மாறியுள்ளார். அவரால் எந்த ஒரு சூழலிலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. அதுமட்டும் இன்றி அதிகளவு ரன் கொடுக்காமல் கட்டுக்கூப்புடன் பந்து வீசுகிறார். எனவே என்னை பொறுத்தவரை அடுத்த டி20 உலக கோப்பை தொடரின் நம்பர் 1 பவுலர் என்றால் அது வருண் சக்கரவர்த்தி தான்.
இதையும் படிங்க : 20-30 பந்திலேயே ஆட்டத்தை மாற்றுவதில் இவர் கில்லாடி.. தொடர்ந்து சேன்ஸ் குடுங்க – பியூஷ் சாவ்லா ஆதரவு
அதேபோன்று அடுத்த டி20 உலக கோப்பை இந்திய அணிக்கான முதல் ஸ்பின்னராகவும் அவரே தேர்வு செய்யப்படுவார். அவரிடம் நல்ல வெரைட்டி இருக்கிறது. பந்துகளை மிக கச்சிதமாக வீசுகிறார் அவருடைய சிறப்பான செயல்பாடு தான் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியால் கோப்பையை எளிதாக கைப்பற்ற முடிந்தது என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.



