ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வென்று இந்தியர்களுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் அதிரடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் 9 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்த அந்த அணி சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரலாற்றை மாற்றுவோம் என்று பேசிய பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றில் 8வது முறையாக உலகக்கோப்பையில் தோற்றதுடன் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் முதல் முறையாக தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் சுமாரான கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் செய்தது முக்கிய காரணமாக அமைந்ததால் பதவி விலக வேண்டும் என்று நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளனர்.
விளாசிய அமீர்:
ஆனால் அதை ஏற்காத முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா இந்தியாவில் ஐபிஎல், ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்கள் இந்தியர்களுக்கு உதவுவது போல் பாகிஸ்தானில் இருக்கும் உள்ளூர் கிரிக்கெட்டின் தரமும் சிஸ்டமும் சரியில்லை என்று தெரிவித்தார். அதனால் சிஸ்டத்தை மாற்ற வேண்டுமே தவிர பாபர் அசாமை மாற்ற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தோனி இந்திய கிரிக்கெட்டை மாற்றினாரே தவிர இந்திய கிரிக்கெட்டின் உள்ளூர் சிஸ்டத்தை மாற்றி அடி மடியில் எதுவும் கையை வைக்கவில்லை என்று அவருக்கு முகமத் அமீர் காட்டமான பதிலை கொடுத்துள்ளது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் தான் முக்கியம். சிஸ்டம் என்பது சுவராகும். பாகிஸ்தான் கிரிக்கெட்டை நடத்துவதற்கு கேப்டன், தேர்வுக்குழு தலைவர் போன்ற 6 – 7 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது”
“1992 உலகக்கோப்பையை இம்ரான் கான் தலைமையில் வென்ற போதும் 1999இல் ஃபைனல் வரை சென்ற போதும் 2029 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் நாம் இதே சிஸ்டத்தின் கீழே விளையாடினோம். பாபர் அசாம் கடந்த 4 வருடங்களாக கேப்டனாக இருந்து தமக்கான அணியை உருவாக்கியும் வெற்றி காண முடியவில்லை. 2015இல் தோல்வியை சந்தித்த பின் தமக்கான அணியை உருவாக்கிய இயன் மோர்கன் 2019இல் இங்கிலாந்துக்கு கோப்பையை வென்றார்”
இதையும் படிங்க: மேட்ச் ஸ்டார்டாகும் முன்பே எதிரணிகளை அவர் பயப்பட வைக்கிறாரு.. இந்திய வீரருக்கு பின்ச் பாராட்டு
“அதே போல ஜோ ரூட் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய இங்கிலாந்தின் அணுகு முறையை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றினார். எனவே இவை அனைத்தும் கேப்டனின் மனநலையை பொருத்ததாகும். சிஸ்டத்தின் மீது தவறில்லை. நாம் இந்திய கிரிக்கெட்டை தோனி மாற்றியதாக சொல்கிறோம். ஆனால் அவர் எப்போதும் சிஸ்டத்தை மாற்றியதில்லை. ஜடேஜா – அஸ்வின் ஆகியோர் தொடர் வாய்ப்புகளால் இன்று ஆல் ரவுண்டர்களாக உருவாகியுள்ளதாக சொல்கிறோம். ஆனால் தோனி அவர்களை உருவாக்கி அணிக்கு கொடுத்தார்” என்று கூறினார்.