IND vs WI : வெ.இ ஒருநாள் தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகி நாடு திரும்பிய இந்திய நட்சத்திர வீரர் – காரணம் இதோ

IND vs WI Mohammed Siraj India Shikhar Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதன் காரணமாக ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முதன்மை வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

அத்துடன் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சஹால் போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் ஸ்பெசலிஸ்ட் வீரர்கள் இந்த தொடரில் இணைந்துள்ளதால் இந்தியா மேலும் வலுவடைந்துள்ளது. அதனால் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸை இந்தத் தொடரிலும் வீழ்த்தி இந்தியா கோப்பையை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்த தொடரில் வலுவான இந்தியாவை ஷாய் ஹோப் தலைமையில் சிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப் போன்ற வீரர்களுடன் எதிர்கொண்டு வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

வெளியேறிய வீரர்:
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரிலிருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடுவார் என்று கருதப்படும் அவர் இந்த வருடம் ஆரம்ப முதலே தொடர்ச்சியாக இந்தியா பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐசிசி ஒருநாள் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி சாதனை படைத்தார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக முழுமையாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் முழுமையாக விளையாடினார். அதே போல நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் 2வது போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட மிகவும் முக்கியமான ஆசிய மற்றும் உலக கோப்பையில் பணிச்சுமையை நிர்வகித்து புத்துணர்ச்சியுடன் களமிறங்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது.

- Advertisement -

அதன் காரணமாகவே இந்த தொடரில் அவருக்கு தாமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரபல ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலவீனமாக இருப்பதால் அதை சமாளிப்பதற்கு உம்ரான் மாலிக், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்களே போதும் என்றும் இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது.

அதன் காரணமாக இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து சிராஜ் போன்ற முக்கிய வீரருக்கு ஓய்வு கொடுக்கும் 2 சிறப்பான விஷயங்களை ஒரே முடிவில் இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஏற்கனவே காயமடைந்துள்ள நிலையில் முஹமது சிராஜ் கடைசி நேரத்தில் அது போன்ற சூழ்நிலையை சந்திக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பாத காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க:IND vs WI : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

எனவே டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் நாடு திரும்பிய போது முகமது சிராஜும் இந்தியாவுக்கு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஓய்வெடுக்கும் முகமது சிராஜ் அடுத்ததாக 2023 ஆசிய கோப்பையில் களமிறங்கி உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement