- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மகளிர் உ.கோ : புதிய உலகசாதனை படைத்த மித்தாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி, மந்தனாவும் அசத்தல் சாதனை

மார்ச் 4ஆம் தேதி முதல் ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து மண்ணில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் 8 அணிகள் 31 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

வரும் ஏப்ரல் 3ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த உலக கோப்பையில் தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான் மோதல்:
நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மௌங்கனி நகரில் இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு ஷபாலி வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் ஸ்மிருதி மந்தனா 52 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 40 ரன்கள் எடுத்து சரிந்த இந்தியாவை ஓரளவு மீட்டெடுத்தார்கள்.

இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 9, துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5, ரிச்சா கோஷ் 1 என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்கள். இதனால் 114/6 என தடுமாறிய இந்தியாவை கடைசி நேரத்தில் களமிறங்கிய இளம் வீராங்கனைகள் பூஜா வஸ்திரக்கர் 67 (59) ரன்கள் ஸ்னே ராணா 53* (48) ரன்கள் என அதிரடியாக பேட்டிங் செய்து அபார பினிஷிங் கொடுத்தார்கள். இதனால் தப்பிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்தியா வெற்றி:
இதை அடுத்து 245 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீராங்கனை அமின் 30 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். இதனால் 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி வெறும் 137 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜேஸ்வரி கைக்வாட் 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதன் காரணமாக 107 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த இந்தியா இந்த உலகக்கோப்பையை சூப்பர் வெற்றியுடன் துவக்கி உள்ளது. மேலும் இந்த வெற்றியின் வாயிலாக இந்த உலக கோப்பையின் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளை பிடித்துள்ள இந்தியா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட பூஜா வஸ்திரக்கர் ஆட்டநாயகி விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

மித்தாலி ராஜ் உலகசாதனை: முன்னதாக இப்போட்டியில் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீராங்கனை மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக உலக கோப்பைகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இதே நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக பங்கேற்ற அவர் அதன்பின் 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த 6 அடுத்தடுத்த உலக கோப்பைகளில் பங்கேற்று இந்த உலக சாதனை படைத்துள்ளார்.

இவரைத் தவிர வேறு எந்த ஒரு வீராங்கனையும் 6 உலக கோப்பைகளில் பங்கேற்றதை கிடையாது. சொல்லப்போனால் உலக அளவில் ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட் ஆகியோர் மட்டுமே 6 உலக கோப்பையில் விளையாடிய பெருமைக்குரியவர்களாக உள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் தனது 6வது மற்றும் கடைசி உலக கோப்பையில் 2011 ஆம் ஆண்டு ஒரு வழியாக கோப்பையை வென்று வெற்றியுடன் விடைபெற்றார். அதேபோலவே மிதாலி ராஜ் உலகக்கோப்பையை வென்று வெற்றியுடன் ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2. ஸ்மிரிதி மந்தனா அசத்தல்: இப்போட்டியில் மீண்டும் ஜொலித்த இந்தியாவின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 52 ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2500 ரன்களை குவித்த 4வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். முதல் 3 இடங்களில் மிதாலி ராஜ் (7623 ரன்கள்), அஞ்சும் சோப்ரா(2856 ரன்கள்), ஹர்மன்ப்ரீட் கௌர் (2664 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.

3. ஜூலன் கோஸ்வாமி: இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வமி 38 விக்கெட்டுகளுடன் உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். அடுத்து வரும் போட்டிகளில் அவர் இன்னும் 2 விக்கெட்டுக்களை எடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பியூல்ஸ்டோன் (39 விக்கெட்கள்) செய்துள்ள சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -