இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது.
அந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காபாவில் மூன்றாவது போட்டி துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவை மீண்டும் நொறுக்கிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஸ்டார்க் எச்சரிக்கை:
பின்னர் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 1, கோலி 3, ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 3வது நாள் முடிவில் 51-4 என திணறும் இந்தியாவுக்கு களத்தில் ராகுல் 33*, கேப்டன் ரோஹித் 0* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 394 ரன்கள் பின்னலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் மழை மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 4, 5வது நாளில் மழை பெய்வதற்கான சூழ்நிலை இருப்பதால் இந்தியாவை விரைவில் அவுட்டாக்கி ஃபாலோ ஆன் கொடுப்போம் என்று ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த வாய்ப்பில் மீண்டும் நன்றாக பந்து வீசி இந்தியாவுக்கு இன்னிங்ஸ் அவமான தோல்வியை கொடுக்க முயற்சிப்போம் என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
மழை தான் காப்பாத்தனும்:
“இந்தியா பிடிப்பதை விட நாங்கள் இன்னும் சில விக்கெட்டுகளை எடுப்போம். நாளை என்ன நடக்கும் என்பது தெரிய வரும். நாங்கள் சரியான இடத்தில் பந்துகளை வைத்து ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்க உள்ளோம். அதை செய்தாலே ஃபாலோ ஆன் கொடுப்பதற்கான வாய்ப்பு தாமாக வரும்”
இதையும் படிங்க: அவர் என்ன குழந்தையா? ப்ரித்வி ஷா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ
“முதல் இன்னிங்ஸில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அற்புதமாக முயற்சித்து அதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். நீங்கள் 450 ரன்கள் குவித்து 50-4 என எதிரணி தடுமாறினால் உங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும். எனவே 4வது நாளின் முதல் செஷனில் அது எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் மழை மட்டும் வழி விட்டால் இந்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஸ்டார்க் உறுதியாக கூறியுள்ளார்.



