- Advertisement -
உலக கிரிக்கெட்

9இல் 1408 ரன்ஸ்.. ஸ்டூவர்ட் ப்ராடை முந்திய ஸ்டார்க் புதிய உலக சாதனை.. ஆஸியிடம் திணறும் இங்கிலாந்து

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி பகலிரவாக இளஞ்சிவப்பு பந்தில் டிசம்பர் 4ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 334 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் சதத்தை அடித்து 138* ரன்கள் எடுத்தார். அவருடன் ஜாக் க்ராவ்லி 76 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ஸ்டார்க் உலக சாதனை:

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 511 ரன்கள் குவித்து முன்னிலைப் பெற்றது. அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 33, ஜேக் வெதர்லேண்ட் 72, மார்னஸ் லபுஸ்ஷேன் 65, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். அதே போல மிடில் ஆடரில் கேமரூன் கிரீன் 45, அலெக்ஸ் கேரி 63, ஜோஸ் இங்லீஷ் 23 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

அவர்களை விட 9வது இடத்தில் களமிறங்கிய மிட்சேல் ஸ்டார்க் இங்கிலாந்தைக் கடுப்பேற்றும் வகையில் நங்கூரமாக விளையாடி அரை சதமடித்தார். அவருக்கு மைக்கேல் நீசர் 16, ஸ்காட் போலண்ட் 21*, ப்ரெண்டன் டோகேட் 13 ரன்களை குவித்து கை கொடுத்தார்கள். அதைப் பயன்படுத்தி 13 பவுண்டரிகளை பறக்க விட்ட ஸ்டார்க் 77 (141) ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தினார்.

- Advertisement -

இங்கிலாந்து திணறல்:

இதையும் சேர்த்து தம்முடைய டெஸ்ட் கேரியரில் 9வது இடத்தில் களறங்கிய போட்டிகளில் ஸ்டார்க் மொத்தம் 1408* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது இடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. மிட்சேல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா): 1408
2. ஸ்டூவர்ட் ப்ராட் (இங்கிலாந்து): 1389
3. டிம் சௌதீ (நியூஸிலாந்து): 1245

இதையும் படிங்க: 234/5 டூ 270க்கு அவுட்.. தெ.ஆ’வை மடக்கிய இந்தியா.. ப்ரெட் லீ, யூனிஸ் சாதனையை சமன் செய்த குல்தீப்

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 134/6 என திணறி வருகிறது. இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 44, பென் டக்கெட் 15, ஓலி போப் 26, ஜோ ரூட் 15, ஹாரி ப்ரூக் 15, ஜேமி ஸ்மித் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இன்னும் 43 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் 4*, வில் ஜேக்ஸ் 4* ரன்களுடன் உள்ளார்கள்.

- Advertisement -