2வது போட்டியிலேயே விராட் கோலியை மிஞ்சிய ஸ்டார்க்.. தூளாகும் கௌதம் கம்பீரின் 24.75 கோடி நம்பிக்கை

Mitchell Starc 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இம்முறை காயத்திலிருந்து குணமடைந்து விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் புதிய ஆலோசகராக வந்துள்ள கௌதம் கம்பீர் உதவியுடன் அசத்தும் கொல்கத்தா 2014க்குப்பின் 3வது கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

முன்னதாக 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார். சமீப காலங்களில் இசான் கிசான், சாம் கரண் போன்ற இளம் வீரர்களும் இதே போல பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அழுத்தத்திற்கு உள்ளான அவர்கள் கடைசியில் சுமாராக செயல்பட்டனர்.

- Advertisement -

சொதப்பும் ஸ்டார்க்:
எனவே 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க்கும் ஐபிஎல் தொடரில் தடுமாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்காக 2015, 2023 உலகக் கோப்பைகளை வென்ற ஏராளமான அனுபவம் கொண்ட ஸ்டார்க் அழுத்தங்களை உடைத்து கொல்கத்தா அணியின் துருப்புச்சீட்டாக செயல்படுவார் என்று கௌதம் கம்பீர் உறுதிப்பட தெரிவித்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் 9 வருடங்கள் கழித்து ஐபிஎல் 2024 தொடரில் களமிறங்கிய ஸ்டார்க் ஹைதராபாத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே விக்கெட் எடுக்காமல் 53 ரன்கள் வாரி வழங்கினார். அதன் வாயிலாக தன்னுடைய ஐபிஎல் கேரியரில் முதல் முறையாக 50 ரன்கள் கொடுத்த அவர் மோசமான பவுலிங்கை பதிவு செய்து பரிதாபமான சாதனை படைத்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து நேற்று பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியிலும் தடுமாற்றமாகவே பந்து வீசிய அவர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 47 ரன்கள் கொடுத்தார். அந்த வகையில் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 100 ரன்கள் வாரி வழங்கியுள்ள மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் 2024 தொடரில் விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களை மிஞ்சி பந்து வீச்சில் முதல் ஆளாக சதமடித்துள்ளார்.

இதையும் படிங்க: அஷ்வின் சொன்ன வார்த்தை பலிச்சிருக்கு.. வேகப்பந்து வீச்சில் கலக்கிய ஆர்.சி.பி வீரர் – நடந்தது என்ன?

அதனால் சமூக வலைதளங்களில் மிட்சேல் ஸ்டார்க் செயல்பாடுகளை ரசிகர்கள் வழக்கம்போல வகை வகையாக கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் கௌதம் கம்பீரின் நம்பிக்கையை தூளாக்கும் வகையில் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் தடுமாறுவது கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ள கொல்கத்தா பெரிய தொகையை முதலீடு செய்துள்ள காரணத்தால் மிட்சேல் ஸ்டார்க்’கிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement