இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து இரண்டாவது போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. மறுபுறம் 2012க்குப்பின் முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமான தோல்வியை சந்தித்துள்ளது.
நியூசிலாந்தின் இந்த வெற்றிக்கு 13 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மிட்சேல் சான்ட்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் சவாலான புனே மைதானத்தில் 359 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 77 (65) ரன்கள் குவித்து அற்புதமாக விளையாடியதாக சான்ட்னர் பாராட்டியுள்ளார். ஆனால் மற்ற இந்திய வீரர்கள் சுமாராக விளையாடியதால் எளிதாக வெற்றி பெற முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜெய்ஸ்வால் அசத்தல்:
மேலும் மும்பையில் நடைபெறும் கடைசி போட்டியிலும் வென்று இந்தியாவை ஒய்ட்வாஷ் செய்து தொடரை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2வது இன்னிங்ஸில் வித்தியாசமாக எதுவும் பந்து வீசவில்லை. இம்முறை கொஞ்சம் கடினமாக இருந்ததாக கருதினேன். இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய விதத்திற்கு இந்தியாவுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும்”
“அவர்கள் நெருப்பான ஷாட்டுகளை அடிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். குறிப்பாக ஜெய்ஸ்வால் அற்புதமாக விளையாடினார். ஆனால் நாங்கள் அங்கேயே நிற்க முயற்சித்தோம். கண்டிப்பாக அதில் ஒருவருடைய பெயர் வரும் என்று நம்பினோம். தொடர்ந்து 20 ஓவர்கள் வீசியதால் நான் கொஞ்சம் சோர்வாக உணர்கிறேன். இது போன்ற சூழலில் அணிக்காக நீங்கள் அதைத்தான் செய்ய விரும்புவீர்கள்”
ஆட்டநாயகன் சான்ட்னர்:
“ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகள் எடுக்கும் போது இன்னும் நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். இங்கே நீண்ட நேரம் பந்து வீசியது எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. ஆனால் அதை செய்து அணியின் வெற்றியில் பங்காற்றியது நன்றாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு தொடரை வெல்வது மிகவும் கடினம் என்பதை நீண்ட காலமாக பார்த்தோம். அதை செய்தது நல்ல உணர்வை கொடுக்கிறது”
இதையும் படிங்க: இந்தியா செஞ்ச இந்த தப்பை நியூசிலாந்து செய்யாததே வரலாறு காணாத வெற்றிக்கு காரணம்.. லாதம் பேட்டி
“அடுத்த சில நாட்களில் மும்பையில் நாங்கள் மீண்டும் விளையாட வேண்டும். இங்கே எடுத்த ஒவ்வொரு விக்கெட்டுகளும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. வித்தியாசமான வேகத்துடன் ஒரே இடத்தில் பந்தை தொடர்ந்து வீசுவதே அங்கேயும் வெற்றி பெறுவதற்கான வழியாக இருக்கும். அதைத் தான் எங்களுடைய ஸ்பின்னர்கள் செய்வதற்கு முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.



