ஐபிஎல் 2022 தொடரில் மே 11-ஆம் தேதி நடைபெற்ற 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு நல்ல பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 7 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த நிலைமையில் 3-வது இடத்தில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலாக பேட்டிங் செய்தார்.
ஆனால் அவருக்கு கைகொடுக்க வேண்டிய மற்றொரு இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 19 (19) ரன்களில் ஏமாற்ற அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்கல் உடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 3-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த அவர் 4 பவுண்டரி 2 சிக்சருடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை கடந்து 50 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெல்லி மிரட்டல்:
ஆனால் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 6 (4) ரியன் பராக் 9 (5) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் தேவ்தூத் படிக்கல் 48 (30) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் மிட்செல் மார்ஷ், சேட்டன் சக்காரியா, அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு முதல் ஓவரியிலேயே கேஎஸ் பரத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அதனால் 0/1 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னருடன் இணைந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த ஜோடி ஆரம்பத்தில் நிதானத்தை காட்டினாலும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு 2-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் மிரட்டல் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது. இதில் 5 பவுண்டரி 8 சிக்சருடன் 89 (62) ரன்களில் ஆட்டமிழந்தார்.
முக்கிய வெற்றி:
மறுபுறம் 5 பவுண்டரி 1 சிக்சருடன் பொறுப்பான 52* (41) ரன்களை டேவிட் வார்னர் எடுக்க இறுதியில் ரிஷப் பண்ட் 2 சிக்சருடன் 13* (4) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரில் 161/2 ரன்களை எடுத்த டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த டெல்லி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக இப்போட்டி டெல்லிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்த நிலையில் 161 ரன்கள் இலக்கை துரத்தும்போது அதிரடியாகவும் அற்புதமாகவும் பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் 89 (62) ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Mitchell Marsh in #IPL2022:-
➡️Was Not out vs LSG but
(Didn't reviewed and walked off)
———****——–➡️Today he was out but
( Opposition didn't reviewed) pic.twitter.com/okhmlo5sMn— َ𝗱𝗮𝗻ı_Î_𝗖𝗵𝗮𝗺𝗽§َ (@DanielSamsDolan) May 11, 2022
இப்போட்டியில் 0/1 என டெல்லி தடுமாறியபோது களமிறங்கிய அவர் 5 ரன்கள் எடுத்திருந்த போது ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதை ராஜஸ்தான் வீரர்கள் அவுட் கேட்டபோதும் அம்பயர் கொடுக்க மறுத்து விட்ட நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சனும் ரிவ்யூ எடுக்காமல் கோட்டை விட்டார். ஆனால் ரிப்ளையில் அது அவுட் எனத்தெரிந்ததால் அதிர்ஷ்டத்துடன் தப்பிய மிட்செல் மார்ஷ் அதன்பின் அதிரடி சரவெடியாக 89 ரன்கள் குவித்து முக்கிய போட்டியில் டெல்லிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
11 வருடம் கழித்து:
இதில் ஆச்சரியம் என்னவெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 வருடங்கள் கழித்து தனது 2-வது ஆட்டநாயகன் விருதை இப்போதுதான் அவர் வென்றுள்ளார். ஆம் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போது இருந்த புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக அசத்தலாக பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகள் எடுத்து அந்த அணியை 136/8 ரன்களில் கட்டுபடுத்த துருப்புச் சீட்டாக செயல்பட்டார். அதனால் இறுதியில் புனே 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையான வெற்றி பெற்றதால் முதல் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இப்போது தான் 11 வருடங்கள் கழித்து 2-வது ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
Player of the match Mitchell Marsh!
🙌#mitchellmarsh #dc #playerofthematch #delhicapitals #rr #ipl2022 #cricketuniverse pic.twitter.com/WzL2IsG0U9— Cricket Universe (@CricUniverse) May 12, 2022
சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் தடுமாறிய அவர் கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 77* (50) ரன்கள் விளாசி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்து அசத்த தொடங்கியுள்ளார்.