
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 2024 – 2025 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரும்பாலும் எதிரணிகளுக்கு களத்தில் அதிரடியான பதிலடிகளை கொடுத்து ஆக்ரோசமாக பேட்டிங் செய்யும் குணத்தை கொண்டவர். அதனால் விராட் கோலி பிறப்பால் இந்தியர் என்றாலும் குணத்தால் ஆஸ்திரேலியர் என்று ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியராக இருக்க விரும்புவதாக அந்நாட்டின் மற்றொரு வீரர் மிட்சேல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களைப் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதாக மார்ஷ் பாராட்டியுள்ளார். அத்துடன் கார் விபத்தில் சந்தித்த காயத்திலிருந்து வலுவான மனதுடன் ரிஷப் பண்ட் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ரிஷப் பண்ட் கிழித்தெறிந்தவர். அவர் ஒரு ஆஸ்திரேலியராக இருக்க விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாக அவர் நிறைய அனுபவங்களை அனுபவித்து வருகிறார். ஒரு நரகத்திலிருந்து மறுபிரவேசம் செய்துள்ளார். நேர்மறையாக இருக்கக்கூடிய இந்தப் பையன் இன்னும் இளமையாக இருக்கிறார். வெற்றிகளை விரும்பும் அவர் நிதானமாகவும் சிரித்துக் கொண்டிருக்கும் ஆளுமைக் கொண்ட போட்டித் தன்மை வாய்ந்தவர்” என்று கூறினார்.
அதே பேட்டியில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் ஆஸ்திரேலியரை போன்ற அதிகமான குணத்தை கொண்டிருக்கும் ஒரு வீரர் என்றால் அது ரிசப் பண்ட் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இயற்கையாக அவருடைய ஆட்டம் அக்ரோசமாக இருக்கிறது. அவருடன் விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்” என்று கூறினர்.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
அவர்கள் பேசிய வீடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ரிஷப் பண்ட் தம்முடைய பங்காற்றினார். குறிப்பாக 2018இல் சிட்னி மைதானத்தில் சதமடித்த அவர் 2021ஆம் ஆண்டு காபாவில் 89* ரன்கள் குவித்து இந்தியா வரலாறு காணாத வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.