இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அங்கே சுப்மன் கில் தலைமையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அடுத்து நடைபெறும் டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்க உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே வலுவான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினமாகும். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோற்றதை மறக்க முடியாது. இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய மரியாதை மிகுந்த எதிரி என்று ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சேல் மார்ஷ் கூறியுள்ளார்.
மரியாதைமிக்க இந்தியா:
அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் தொடருக்கு ஆஸ்திரேலியா தயாராக இந்திய தொடர் நல்ல டைமிங்கில் நடைபெறுவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஆஷஸை நோக்கி எங்களை கட்டமைத்து வருகிறோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை அனைவரும் விரும்புவார்கள்”
“ஒரு அணியாக இந்தியா மேலே நாங்கள் சிறந்த மரியாதையை வைத்துள்ளோம். நல்ல எதிரியான அவர்களுடன் எங்களுக்கு சிறந்த போட்டி இருக்கிறது. ஆஷஸ் தொடருக்கு முன் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கச்சிதமான (டைமிங்) நேரமாகும். அது சிறந்த தொடராக இருக்கும். ஒருநாள் (2027) உலகக் கோப்பைக்கு தூரம் இருக்கிறது”
ஆஸ்திரேலியா கேப்டன் கருத்து:
“எனவே அதற்குத் தேவையான அணியை நீங்கள் கட்டமைக்க வேண்டும். அனைத்து வீரர்களும் அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாடுவது கிட்டத்தட்ட அசாத்தியமானது என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களுக்கு நல்ல வாய்ப்பையும் கொடுக்கும். அதை வைத்து நீங்கள் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்து ஆழமானத் திறமையை உருவாக்கலாம். எங்களுடைய அடுத்த கவனம் 2026 டி20 உலகக் கோப்பையில் இருக்கிறது”
இதையும் படிங்க: 23 வருடத்துக்கு பின் கேம்பல் 2 சாதனை சதம்.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியாவை திருப்பி அடிக்கும் வெ.இ
“அதனால் இங்கிருந்து ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பது போல் தோன்றுகிறது. இப்போதும் நாங்கள் எது எங்களுடைய சிறந்த அணி, எப்படி ஆழத்தை உருவாக்க முடியும் என்பதை கண்டறிகிறோம். ஏனெனில் (2027) உலகக் கோப்பைக்கு முன் எங்களுக்கு நிறையப் போட்டிகள் இருக்கிறது. அதை நோக்கிய பயணத்தில் நாங்கள் உற்சாகத்துடன் இருக்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராக எங்களால் காத்திருக்க முடியவில்லை” என்று கூறினார்.



