ஆஸ்திரேலியாவுக்கு ஆணவம், அவப்பெயரை கொடுத்த வார்னருக்கு எதுக்கு மரியாதை? ஜான்சன் விளாசல்

Mitchell Johnson
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் பட் கமின்ஸ் தலைமையிலான முதன்மை ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. 21ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இருந்து வரும் ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் தொடரையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விளாசிய ஜான்சன்:
அந்த வகையில் வரும் டிசம்பர் 14ஆம் தேதி சிட்னி நகரில் இத்தொடரின் முதல் போட்டி துவங்குகிறது. அதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நவீன கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஒரு வருடம் தடை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் தம்முடைய ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்”

இதையும் படிங்க: எனக்கு ரஹானே வேணாம்.. அந்த பையன் தான் வேணும்.. அடம்பிடித்து தேர்வு செய்த – ரோஹித் சர்மா

“குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா” என்று கூறியுள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஜான்சன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement