
ஆசியக் கோப்பை 2025 தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 4 போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியா 18.5 ஓவரில் பாகிஸ்தானை பந்தாடி இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் அடித்து பாகிஸ்தானை 2வது முறையாக தோற்கடிக்க உதவினர். அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கடந்தப் போட்டியில் சாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த அவர் இம்முறை சிக்சரை பறக்க விட்டார். அதே போல ஹரிஷ் ரவூபையும் வெளுத்து வாங்கிய அபிஷேக் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 189 ஸ்ட்ரைக் ரேட்டில் 74 ரன்கள் அடித்து பாகிஸ்தானை வீழ்த்தினார். அதனால் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை அவர் நிரூபித்தார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களை அபிஷேக் ஷர்மா வலைப்பயிற்சியில் (நெட்) எதிர்கொள்வதைப் போல் எளிதாக எதிர்கொண்டதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் பாராட்டியுள்ளார். குறிப்பாக அஃப்ரிடிக்கு எதிராக சிறிய மாற்றத்தை செய்து வெளுத்து வாங்கிய அவருடைய ஆட்டம் பற்றி மிஸ்பா பேசியது பின்வருமாறு. “அபிஷேக் கொண்டிருக்கும் திறன் மற்றும் மனோபாவம் அபாரமானது”
“பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக விளையாடிய போதே அவர் அழுத்தத்தின் கீழ் விளையாடியது போல் தெரியவில்லை. சொல்லப்போனால் அவர் வலைப் பயிற்சியில் விளையாடுவது போல் பேட்டிங் செய்தார். தம்முடைய இடத்தில் பந்து இருக்கும் போது அவர் அதை மிகவும் பொறுமையாக வெளியே பறக்க விடுகிறார். அவர் எப்போதும் எதிரணியின் முதன்மை பவுலரை அடித்து அழுத்தத்திற்குள் தள்ள முயற்சிப்பது முக்கியமான விஷயமாகும்”
இதையும் படிங்க: அவங்களால 19 ரன்ஸ் மிஸ்.. இல்லனா இந்தியாவை வீழ்த்திருப்போம்.. பாகிஸ்தான் கேப்டன் ஆதங்க பேட்டி
“அது எதிரணியைத் தொல்லை செய்யும். கடினமான லென்ந்தில் பந்து வீசுவதே வேகப்பந்து வீச்சாளர்களின் முதன்மை ஆயுதமாகும். ஆனால் அதில் கொஞ்சம் அகலம் இருந்தாலும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். அந்த லென்த்தில் அஃப்ரிடி வீசிய பந்துகளை அபிஷேக் மதித்து விளையாடினார். ஆனால் அதுவே கொஞ்சம் ஷார்ட் அல்லது ஃபுல்லாக வீசும் போது அவர் கொஞ்சம் பவர் கொடுத்து அடித்து நொறுக்குகிறார்” என்று கூறினார்.