ஒன்றல்ல 2 கவனக்குறைவால் சொந்த மண்ணில் பறிபோன வெற்றி – களத்திலேயே புலம்பிய மிட்சேல் சாட்னர், நடந்தது என்ன

Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை கோட்டை விட்ட இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் அதிரடியால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தாலும் 19.4 ஓவரில் ஆல் அவுட்டாகி 160 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டது.

IND vs NZ

அந்த அணிக்கு ஃபின் ஆலன் 3, மார்க் சாப்மேன் 12 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானாலும் 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுப்படுத்திய டேவோன் கான்வே 59 (49) ரன்களும் கிளன் பிலிப்ஸ் 54 (33) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். அப்போது 130 ரன்களுடன் நல்ல நிலையிலிருந்து அந்த அணியை அடுத்து வந்து டார்ல் மிட்சேல் 10, ஜிம்மி நீசம் 0 என முக்கிய வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த இந்தியா 200 ரன்களை தொடவிடாமல் மிரட்டியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அரஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

2 மெகா தவறுகள்:

அதை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல இஷன் கிசான் 10, ரிசப் பண்ட் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் சூரியகுமார் யாதவும் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் முக்கிய நேரத்தில் கேப்டன் பாண்டியா அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்ததால் 9 ஓவரில் 75/4 ரன்களை இந்தியா எடுத்திருந்த போது மழை வந்துது. ஆச்சரியப்படும் வகையில் டிஎல்எஸ் முறைப்படி கச்சிதமாக தேவையான ரன்களை இந்தியா சரியாக எடுத்திருந்ததால் இப்போட்டி டையில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்ற இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் அணியுடன் சாதித்து காட்டியுள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இப்படி மண்ணை கவ்விய நியூசிலாந்து வெற்றி கையிலிருந்தும் முக்கிய நேரத்தில் செய்த 2 சொதப்பல்களால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர முடியாமல் போனது. குறிப்பாக இஸ் சோதி வீசிய 8வது ஓவரின் கடைசி பந்து எதிர்கொண்ட தீபக் ஹூடா பேக்வேர்ட் பாய்ண்ட் திசையில் அடித்து சிங்கிள் எடுக்க முயற்சித்தார். இருப்பினும் அந்தப் பந்து நியூசிலாந்து வீரர் மிட்செல் சாட்னர் கைக்கு சென்றதால் சிங்கிள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்தப் பந்தை சரியாகப் பிடிக்க தவறிய அவர் தடுமாறியதை பயன்படுத்திய இந்தியா கச்சிதமாக சிங்கிள் எடுத்தது. ஒருவேளை அவர் அதை சரியாக தடுத்திருந்தால் நிச்சயமாக இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோற்றிருக்கும். அதைப் போட்டி முடிந்ததும் மிச்சல் சேட்னர் ஒப்புக்கொண்டு பேசியது பின்வருமாறு. “ஆம் அந்த ஒரு ரன் எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. அதற்காக அனைவரும் விமர்சிப்பார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் அந்த சமயத்தில் சரியான ஸ்கோர் மற்றும் பந்து எங்களுக்கு தெரியாது” என்று கூறினார். அது கூட ஈரப்பதமான வானிலையால் நழுவி போயிருக்கும் என்று சொல்லலாம்.

அதற்கு முன்பாகவே லாக்கி பெர்குசன் வீசிய 6வது ஓவரை எதிர்கொண்ட இந்திய கேப்டன் பாண்டியா ஒரு பந்தை அடிக்க முயற்சித்தும் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்தார். ஆனால் அதை கவனிக்க தவறிய இதர நியூசிலாந்து வீரர்கள் பந்தை வீசிய பெர்குசன் லேசாக அப்பில் செய்ய முயற்சித்ததற்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதனால் அவரும் அவுட் இருக்காதோ என்று நினைத்து விட்டு விட்டார். ஆனால் ரிப்ளையில் அது அவுட் என்று தெளிவாக தெரிந்தது. அதை சரியாக செய்திருந்தால் பாண்டியாவும் 30 ரன்கள் அடித்திருக்க மாட்டார். நியூசிலாந்தின் சொந்த மண்ணில் வென்று தொடரை சமன் செய்திருக்கும்.

Advertisement