
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த நிலையில் இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி ஃபைனலில் விளையாடப் போகும் அணிகள் பற்றி நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கின்றன. எனவே இம்முறையும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் காணப்படுகின்றன.
மிஸ்பாவின் கணிப்பு:
அதே சமயம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இறுதிப் போட்டிக்கு வரும் என்ற காணப்படுகிறது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியா தகுதி பெறும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கணித்துள்ளார். அதே போல இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அல்லது இந்தியா தகுதி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எப்படி வெல்வது என்பது தெரியும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வழி தெரியும். கடந்த வருடம் ஆசியாவுக்கு வந்த அவர்கள் ஒரு ஸ்பின்னரை மட்டும் வைத்து உலகக் கோப்பையை வென்றனர்”
“எனவே இந்த உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியாவை நீங்கள் குறைத்து எழுத முடியாது. 2வது அணியை கணிப்பது மிகவும் கடினம். இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த நான் பாகிஸ்தான் தகுதி பெறும் என்று ஆதரவு கொடுப்பேன். இந்திய அணியும் மிகவும் வலுவானது. அதே போல மற்ற அணிகளும் வலுவாகவே உள்ளன” என்று கூறினார்.
இதையும் படிங்க: 62 ரன்ஸ்.. வங்கதேசத்தை ஊதி தள்ளிய இந்தியா.. முக்கிய பிரச்சனை தீர்ந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி
முன்னதாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. அதனால் அதிர்ஷ்டத்துடன் பாகிஸ்தான் ஃபைனலில் விளையாடியது. மறுபுறம் இங்கிலாந்து அணியிடம் செமி ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.