இப்டி பண்ணிக்கிட்டு இருந்தா முடிச்சு விட்ருவோம், பேசாம வேலைய பாருங்க – சர்ப்ராஸ் கானை கண்டித்த மும்பை செலக்டர்

Sarfaraz Khan Milind Rege
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டார்கள் என்பதற்காக சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் உண்மையாக இந்திய டெஸ்ட் அணிக்கு உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களின் செயல்பாடுகளை தான் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதை செய்யாத சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கடந்த 3 சீசன்களாக ரஞ்சிக்கோப்பையில் 800, 900 போன்ற பெரிய ரன்களையும் சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து ரன் மெஷினாக செயல்பட்டு வரும் இளம் வீரர் சர்பராஸ் கானை மீண்டும் புறக்கணித்துள்ளது யாரையுமே திருப்தி படுத்தவில்லை. குறிப்பாக சூரியகுமார் யாதவ், இஷான் கிசான் ஆகியோர் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டுள்ள நிலையில் 80க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி கொண்டுள்ள அவர் உலக அளவில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனக்கு பின் அதிக சராசரியை கொண்டுள்ள வீரராக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

முடிச்சி விட்ருவோம்:
முன்னதாக கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை ஃபைனலில் சதமடித்த போது கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று சேட்டன் சர்மா தம்மிடம் வாக்குறுதி கொடுத்திருந்ததாக சமீபத்தில் சர்பராஸ் கான் தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னது போல வங்கதேச தொடரில் தேர்வு செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஆஸ்திரேலிய தொடரிலும் தம்மை தேர்வு செய்யாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்தரங்கமாக தேர்வுக்குழுவினர் சொன்ன கருத்துக்களையும் தேர்வுக்குழுவுக்கு எதிராகவும் பொதுவான இடத்தில் பேசுவதை சர்ப்ராஸ் கான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் மும்பை கேப்டன் மற்றும் தற்போதைய மும்பை மண்டலத்தின் தேர்வுக்குழு தலைவர் மிலின்ட் ரேக் கூறியுள்ளார். மேலும் தற்போதைய இந்திய அணியில் உங்களுக்கு இடமில்லை என்பதால் பேசாமல் வாய்ப்பு வரும் வரை தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்களை அடித்துக் கொண்டே இருங்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள். அதை விட்டுவிட்டு இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது உங்களுக்கு எந்த உதவியும் செய்யாது. குறிப்பாக சர்பராஸ் கான் இந்திய அணிக்காக தாம் தேர்வு செய்யப்படாததற்கு எதிராக பேசுவதை நிறுத்த வேண்டும். தனது பேட்டிங்கில் கவனத்தை செலுத்தி தொடர்ந்து ரன்களை குவிக்க வேண்டியது மட்டுமே அவருடைய வேலையாகும். அவர் நல்ல பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முதலில் அவர் விளையாடுவதற்கு இந்திய அணியில் தகுதியான இடம் வேண்டும். தற்சமத்தில் அவர் கொண்டுள்ள ஃபார்ம் நம்ப முடியாதது மற்றும் அபாரமானது. இருப்பினும் அணியில் வாய்ப்பு இருந்தால் அவருக்கு அது நிச்சயமாக கிடைக்கும்”

“ஆனால் தற்போது இந்திய அணியில் அவருக்கான இடம் எங்கே உள்ளது? மேலும் அமோல் போன்ற முதல் தர கிரிக்கெட்டில் 11,000 ரன்களுக்கு மேல் அடித்த ஒருவர் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு பெறாமல் தற்போது மும்பை அணியின் பயிற்சியாளராக இருப்பதை சர்பராஸ் கான் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அமோல் ஏராளமான ரன்களை அடித்தும் இந்தியாவுக்காக எப்போதுமே விளையாட தேர்வாகவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் அவர் விளையாடுவதற்கு தேசிய அணியில் இடமில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவரு ஒரு மேட்ச் வின்னர். அவரை போயி வெளிய உட்கார வைக்குறீங்களே – கபில் தேவ் ஆதங்கம்

அவர் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருந்தாலும் அதற்காக தன்னுடைய தேர்வு பற்றி வெளியில் பேச கூடாது என்று தெரிவிப்பது கல்லூரியில் ஏதேனும் செய்தால் இன்டர்னல் மார்க் குறைத்து விடுவோம் என்று தெரிவிப்பது போல் உள்ளதாக ரசிகர்கள் பதிலளிக்கிறார்கள்.

Advertisement