சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து துவக்க வீரராக மட்டுமே விளையாடி வந்தார். அப்படி துவக்க வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த பல ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியின் பல வெற்றிகளுக்கு தனது பேட்டிங்கின் மூலம் பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரை சென்னை அணி வென்ற போது டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரது கூட்டணி கொடுத்த சிறப்பான துவக்கமே முக்கிய காரணமாக அமைந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் 3 ஆம் இடத்தில் களமிறங்குவது ஏன்? மைக்கல் ஹஸி பேட்டி :
ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக டேவான் கான்வே விளையாட முடியாமல் போனதால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடியிருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் ஆரம்பகட்ட போட்டிகளில் ராகுல் திரிப்பாதி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடி இருந்தனர்.
அதேவேளையில் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடி வந்தார். ஆனால் இப்படி ருதுராஜ் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடியதில் இருந்து சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருவதால் ஓப்பனிங் மாற்றம் தேவை என்று பலராலும் பேசப்பட்டது.
அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடிய வேளையில் ருதுராஜ் மீண்டும் மூன்றாவது வீரராகவே களமிறங்கினார். ஆனால் ரசிகர்கள் பலரும் ருதுராஜ் மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் களமிறங்குவதில் விடாப்பிடியாக இருக்கிறார்.
இந்நிலையில் அவர் இப்படி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் களமிறங்க என்ன காரணம்? என்பது குறித்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் இடைவேளையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹஸி சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மெகா ஏலத்தின் போதே ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் தான் விளையாடப்போகிறேன் என்பதை உறுதி செய்து விட்டார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான போட்டி.. பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல்க்கு விதிக்கப்பட்ட அபராதம் – என்ன நடந்தது?
ஏனெனில் தற்போதைய சிஎஸ்கே அணியில் துவக்க வீரர்கள் அதிரடியான துவக்கத்தை அளிக்கும் பட்சத்தில் மிடில் ஓவர்களில் அந்த துவக்கத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும் இன்னிங்சை நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இனிவரும் போட்டிகளிலும் அவர் மூன்றாம் இடத்தில் தான் விளையாடுவார் என்று மைக்கல் ஹஸி கூறியது குறிப்பிடத்தக்கது.



