
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ள தோனி வெற்றிகரமான கேப்டனாக சாதனைப் படைத்துள்ளார்.
அதனால் இப்போதும் ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தைப் பார்ப்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும் தற்போது 44 வயதைக் கடந்துள்ள அவர் 2026 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனியுடன் ஐபிஎல் தொடரில் வீரராகவும் பயிற்சியாளராகவும் விளையாடுவது தம்முடைய கேரியரில் சிறந்த விஷயம் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ள தோனி மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக அறியப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட தோனி விக்கெட் கீப்பிங்கில் அசத்துவதற்காக தனியாக பயிற்சிகள் எடுத்து தாம் பார்த்ததில்லை என்றும் ஹசி தெரிவித்துள்ளார். மேலும் அணியில் உள்ள அனைவரும் தம்மைப் பார்ப்பதற்காக 24 மணி நேரமும் தோனி தம்முடைய அறையின் கதவுகளை திறந்து வைத்திருப்பார் என்றும் ஹசி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இது பற்றி ஒரு ஆஸ்திரேலியா யூடியூப் சேனைலில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி மிகவும் அற்புதமானவர். அவருடைய அறைக்கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதனால் யார் வேண்டுமானாலும் அவருடைய அறைக்குச் சென்று உட்கார்ந்து பேசலாம். அவருடைய ஓய்வறையில் சக வீரர்களை உட்கார்ந்து பேசலாம்”
“அந்த வகையில் அவர் எப்போதும் தன்னுடைய வீரர்களை ஒன்றாக இருப்பதற்கான வழியை வைத்திருப்பார். அதனால் நிறைய வீரர்கள் உணவை எடுத்துச் சென்று தோனியின் அறையில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அதற்கான அனுமதியைக் கொடுத்த தோனிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். சென்னை அணிக்காக 8 வருடங்கள் வீரராக விளையாடிய நான் தற்போது 8 வருடங்கள் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன்”
இதையும் படிங்க: இதுக்காக ரசிகர்கள் சொல்றத பத்தி எனக்கு கவலையில்ல.. என் திட்டத்தையும் மாத்த மாட்டேன்.. ராணா பேட்டி
“இந்தக் காலங்களில் தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்ததை நான் எப்போதும் பார்த்ததில்லை. ஆனால் அவர் மிகவும் நீண்ட நேரம் பேட்டிங் எடுப்பார். ஒவ்வொரு முறையும் அவர் ஆயிரக்கணக்கான பந்துகளை பயிற்சியில் எதிர்கொண்டு அடிப்பார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2026 சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே அணி தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது