
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களது முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. இதையடுத்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அப்போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாயில் துவங்க உள்ளது.
அப்போட்டியில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா நிச்சயம் பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர். குறிப்பாக போட்டி நடைபெறும் துபாய் மைதானம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது.
அங்கே குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்க தங்களிடமும் 5 தரமான ஸ்பின்னர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த வாரம் ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
அப்போட்டியில் ஹாட்ரிக் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகள் எடுத்த முகமது நவாஸ் உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர் என்று ஹெசன் தெரிவித்துள்ளார். எனவே தங்களுடைய ஸ்பின்னர்கள் இந்தியாவை வீழ்த்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணியின் அழகு என்னவெனில் எங்களிடம் 5 ஸ்பின்னர்கள் உள்ளனர்”
“எங்களிடம் தற்சமயத்தில் உலகின் சிறந்த ஸ்பின் பவுலரான முகமது நவாஸ் இருக்கிறார். அணியில் கம்பேக் கொடுத்தது முதல் கடந்த 6 மாதங்களாக அவர் சிறந்த வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவருடன் அப்ரார் அகமது, சுபியன் முஹீம் ஆகியோரும் உள்ளனர். சாய்ம் ஆயுப் தற்போது டாப் 10 ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருக்கிறார். சல்மான் ஆகா அதிகம் பவுலிங் செய்ய மாட்டார் என்றாலும் பாகிஸ்தானுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய ஸ்பின்னராக திகழ்கிறார்”
இதையும் படிங்க: அரசாங்கம் அவங்க வேலையை பாப்பாங்க.. நீங்க உங்க வேலையை சரியா செய்யுங்க.. இந்திய அணிக்கு – கபில்தேவ் அட்வைஸ்
“எனவே எங்களிடம் நிறைய ஸ்பின் பவுலிங் ஆப்ஷன்கள் இருக்கிறது. அது துபாய் மைதானத்திற்கு பொருந்தும் என்று நாங்கள் நினைக்கிறோம். நான் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை வெளியே இருந்து பார்த்துள்ளேன். இம்முறையும் அப்போட்டி சிறப்பாக இருக்கும். தாங்கள் விளையாடும் விதத்தில் இந்தியா பெரிய தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் நாங்கள் அதிகம் சிந்திக்காமல் நாளுக்கு நாள் அணியாக முன்னேறுவதில் கவனம் செலுத்துகிறோம். எங்களுக்கு முன் பெரிய வேலை இருக்கிறது என்பதும் தெரியும். அதற்காக உற்சாகத்துடன் முன்னோக்கியுள்ளோம்” என்று கூறினார்.