இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே வேளையில் பல பதற்றமான சம்பவங்கள் நடைபெற்றன. அதாவது வீரர்களுக்கு இடையே மோதல், சீண்டல், ஸ்லெட்ஜிங் என அனைத்தும் கலந்த பரபரப்பு ஆட்டமாக இந்த போட்டி அமைந்தது.

முதல் இன்னிங்சில் போது இங்கிலாந்து அணியின் பின்வரிசை பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்களை தொடர்ந்து வீசினார். இதன் காரணமாக ஆண்டர்சன் அதிர்ப்தி அடைந்து களத்திலேயே பும்ராவிடம் அவரது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி பும்ரா செய்த இந்த செயலை மனதில் வைத்திருந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா பேட்டிங் செய்ய வரும்போது அவருக்கு தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார்.
ஆனால் அந்த பந்துகளை சரியாக கணித்து விளையாடிய பும்ரா இரண்டாவது இன்னிங்சில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிவிட்டார். இறுதி கட்டத்தில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு தேவையான ஸ்கோரை அடித்து கொடுத்தனர். பிறகு 60 ஓவரில் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்று இருந்த வேளையில் விராத் கோலி தாங்கள் சந்தித்த அனைத்தையும் இந்த இரண்டாவது இன்னிங்சில் வெளிப்படுத்தினார்.

பட்லர், ராபின்சன் ஆகிய வீரர்களை ஸ்லெட்ஜிங்கும் செய்துவிட்டார். அதேபோன்று ராபின்சன்க்கு பவுன்ஸர்களை வீசிவிட்டு கோபமாக முறைத்து பார்த்தார். அதுமட்டுமின்றி பல முறை கேப்டன் கோலி இங்கிலாந்து வீரர்களை வெளிப்படையாகவே சீண்டினார். இவ்வாறாக மொத்த போட்டியும் பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த நிலையில் அவர்களை அந்த அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியை நீங்கள் உசுப்பேற்றி விட்டுள்ளீர்கள் அதன் காரணமாகத்தான் அவர்கள் இரண்டாவது டெஸ்டில் ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளார்கள். இனி நீங்கள் மீண்டும் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும். ஆனாலும் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி இதே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும், சும்மா இருந்த இந்தியர்களை நீங்கள் சீண்டியதால் இந்த விளைவினை சந்தித்துள்ளீர்கள் என அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



