ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா முதல் முறையாக சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த தொடரில் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.
ஆனால் அங்கிருந்து அபாரமாக விளையாடிய இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் ரகானே தலைமையில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் கோப்பையை வென்றது. மேலும் 2014க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வென்றுள்ளது. அதனால் நவீன கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு சமமாக இந்திய அணியும் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியை கொடுப்பதாக பலரும் கருதுகிறார்கள்.
ஆஸ்திரேலியா – இந்தியா:
அதனால் ஆஷஸ் தொடருக்கு நிகராக இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை போட்டி மிகுந்த தொடராக இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அதை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் முற்றிலும் மறுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டி என்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சில பேச்சுக்கள் காணப்படுகின்றன. அதை நான் மறுக்கிறேன்”
“வரலாறு என்று வரும் போது எதுவும் ஆசஸ் தொடரை நெருங்க முடியாது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே 150 வருடங்கள் கொண்ட பாரம்பரியமும் போட்டியும் இருந்து வருகிறது. 1980களில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது போல இந்த தலைமுறையில் இந்தியா விளையாடும் தொடர் சிறப்பாக உள்ளது”
நெருங்க முடியாது:
“தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுமாராக விளையாடுவதால் நாம் அதைப் பற்றி பேசுவதில்லை. எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதே போன்ற போட்டியை இன்னும் சில தலைமுறைகளாக தொடர்ந்து பின் வேண்டுமானால் நாம் அதை சிறந்த போட்டி என்று சொல்லலாம். ஆனால் இப்போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இடைவெளி விடுங்கள். தற்சமயத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தொடர்ச்சியாக அசத்தி வருகிறது”
இதையும் படிங்க: ஃபார்ம் இல்லனாலும் அனுபவம் பேசும்.. இதை செஞ்சா விராட் கோலி ஆஸியில் மிரட்டுவாரு.. புஜாரா பேட்டி
“இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒருதலைப் பட்சமாக நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 4 தொடர்களையும் இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றது. அதில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும் அந்த முடிவுகள் 2 அணிகளுக்கும் இடையே நல்ல போட்டி இருக்கிறது என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.



