இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலககோப்பை தொடரானது இங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதுமட்டுமின்றி இந்த போட்டி தொடருக்கான அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டமான தொடரில் எந்த அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வெல்லும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில் இந்த டி20 உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் தங்களை மும்முரமாக தயார் செய்து வருகின்றன.
இந்நிலையில் எந்த அணி இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என்பது குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
தற்போது உள்ள அணிகளின் பலத்தைப் பார்க்கும்போது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு அவர்களிடம் உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் சிறப்பான பார்மில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று இங்கிலாந்து அணியை தவிர்த்து அடுத்த இரண்டு இடங்களில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா சென்ற போது இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்தது. அதேபோன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வெஸ்ட் இண்டீஸ் அவர்கள் மண்ணில் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்ததால் அவர்கள் இருவரையும் மைக்கல் வாகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.