இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடிய அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது.
அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் 2014 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இளம் விராட் கோலியை மண்ணை கவ்வ வைத்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக அசராத விராட் கோலி 2018 இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஆட்டிப் பார்த்து பதிலடி கொடுத்ததாக அவர் பாராட்டியுள்ளார்.
2021இல் தவறிய வெற்றி:
மேலும் 2021 இங்கிலாந்து தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையில் இந்தியா முன்னிலைப் பெற்ற போது கடைசி போட்டி லாக் டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2022இல் அப்போட்டி நடைபெற்ற போது வென்ற இங்கிலாந்து தொடரை சமன் செய்தது. அந்த வகையில் 2021இல் தவறிய வெற்றியை இம்முறை விராட் கோலி, ரோஹித் பெற்றுக் கொடுப்பதற்கு முன் பிசிசிஐ கழற்றி விட்டதாகவும் மைக்கேல் வாகன் சாடியுள்ளார்.
இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அனைத்து சுற்றுப்பயணத்திலும் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட் இருந்தனர். இப்போது அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே புதிய இங்கிலாந்து பவுலர்களை விராட் கோலி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பார்க்க காத்திருந்தேன்”
விடை பெற்ற நட்சத்திரங்கள்:
“ஆண்டர்சனுக்கு எதிராக 2018 எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் அவர் கொடுத்த போட்டி அபாரத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. உலகின் 2 சிறந்த வெற்றியாளர்கள் மோதிய அந்தப் போட்டி ஹெவி வெயிட்டாக இருந்தது. கோலி மீது ஆண்டர்சனுக்கு கோபம் இருந்தது. தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டதால் இம்முறை விராட் கோலி இங்கிலாந்தில் சுறுசுறுப்புடன் அட்டாக் செய்து விளையாடுவார் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க: அதுக்காக இதயத்தையே கொடுத்த விராட் கோலி.. சச்சின் மாதிரி இந்தியாவுக்கு அசத்துனாரு.. ஆதர்டன் பாராட்டு
“உலகின் மற்ற பகுதிகளில் நம்ப முடியாத ஆக்ரோசத்துடன் விளையாடிய அவர் இங்கிலாந்தில் எப்போதும் தடுப்பாட்டம், திறன், பொறுமை, டெக்னிக் ஆகியவற்றைப் பின்பற்றி விளையாடினார். ரோகித் சர்மாவை இந்தியா மிஸ் செய்யும். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அது கிடைக்கவில்லை. ஏனெனில் இங்கிலாந்தில் இந்தியாவுக்கு முழுமையாக முடியாத வியாபாரம் ஒன்று உள்ளது. 2021 இங்கிலாந்து டெஸ்ட் தொடரை லாக் டவுன் வராமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும். அப்போட்டி மீண்டும் நடைபெற்ற போது ரோஹித் விளையாடவில்லை” எனக் கூறினார்.



