ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்து வெளியேற்றிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. முன்னதாக 42 வயதாகும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனால் சென்னை அணி பிளே ஆஃப் சென்று இறுதிப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் கோப்பையை வென்று அவரை வெற்றிகரமாக வழியனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போட்டியில் தோல்வியை சந்தித்ததால் அந்த வாய்ப்பை சிஎஸ்கே அணி கோட்டை விட்டது. முன்னதாக அந்தப் போட்டி முடிந்ததும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் கை கொடுத்தனர்.
தோனி மீது தப்பில்ல:
அப்போது தம்மால் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாததால் சோகத்தில் அமர்ந்திருந்த தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்கு சிஎஸ்கே வீரர்கள் வரிசையில் முதல் ஆளாக சென்றார். இருப்பினும் அப்போது வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் தோல்வியை சந்தித்த ஏமாற்றத்தில் இருந்த தோனி தாம் சிஎஸ்கே கேப்டன் கிடையாது என்பதால் ருதுராஜை வரச்சொல்லி கை கொடுக்குமாறு சொன்னார்.
அப்படியே ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காத அவர் பெவிலியனில் இருந்த வந்த பயிற்சியாளர்களுக்கு மட்டும் கை கொடுத்து வேகமாக வெளியேறி விட்டார். இறுதியில் தோனிக்கு கை கொடுப்பதற்காக தேடிய விராட் கோலி பின்னர் பெவிலியனுக்குள் சென்று அவரைப் பார்த்தார். இந்த வீடியோ வைரலானத்தைத் தொடர்ந்து ஜென்டில்மேன் விளையாட்டில் தோனி இப்படி கை கொடுக்காமல் செல்லலாமா என்று தோனியை ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் க்ரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இது எம்எஸ் தோனியின் கடைசி ஆட்டமா என்ற விழிப்புணர்வு பற்றி நமக்கு தெரியாது. அது போன்ற சூழ்நிலையில் “லெஜெண்ட் அங்கே இருக்கிறார். அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்” என்று ஆர்சிபி வீரர்கள் முடிவெடுத்து ஓடியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: நேர்மையான திட்டம்.. ஆண்டவனே எங்க பக்கம் இருக்காரு.. சிஎஸ்கே ரசிகர்களை கடுப்பேற்றிய விராட் கோலியின் கருத்து
“அந்த வகையில் நீங்கள் கை கொடுத்து மரியாதை செய்து விட்டுப் பின்னர் உங்களுடைய அனைத்து கொண்டாட்டங்களிலும் ஈடுபடலாம். ஏனெனில் நாளை காலை எழுந்திருக்கும் போது ஒருவேளை எம்.எஸ். தோனி ஓய்வு பெற்று விட்டார் என்ற செய்தியை கேட்டால் அதை ஆர்சிபி வீரர்கள் விரும்ப மாட்டார்கள். அப்போது அவர்கள் நாம் கொண்டாடுவதற்கு முன்பாக தோனிக்கு கண்ணியமாக கை கொடுத்திருக்கலாமே என்று நினைப்பார்கள்” எனக் கூறினார்.



