இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குவதால் வெற்றி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பல ஜாம்பவான்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியால் தொடர்ச்சியாக வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் பிறந்து கிரிக்கெட்டை விளையாடிப் பழகிய வளர்ந்தவர்கள். ஆனால் இங்கிலாந்து மண்ணில் பெரும்பாலான ஆடுகளங்கள் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்கும்.
100 வருடத்தில் 14 தோல்வி:
மேலும் அங்கு மேகமூட்டத்துடன் கூடிய காற்றடிக்கும் சீதோசன வானிலையில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். அதனால் அந்தப் பந்துகளை காலம் காலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்கள். அதன் காரணமாக வரலாற்றில் 1971, 1986, 2007 ஆகிய வருடங்களில் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி கண்டுள்ளது.
மற்ற அனைத்து தொடர்களிலும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா தோல்விகளை சந்தித்துள்ளது. அது போன்ற சூழ்நிலையில் இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் அனுபவமிக்க சீனியர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி இம்முறை இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது.
வாகன் கிண்டல்:
இந்நிலையில் இம்முறையும் தோற்பதற்காகவே இந்திய அணி இங்கிலாந்துக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்தியா – இங்கிலாந்து தொடரை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி விளம்பரத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 100 வருடங்களில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 14 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது”
“இந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் மீண்டும் அவர்கள் தோற்பதற்காகவே இங்கே விளையாட வந்துள்ளார்கள்” என்று கிண்டலாக பேசியுள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் “இந்தியா வெற்றி பெறுவதற்காக வந்திருக்கிறது” என்று நீங்கள் சொன்னால் தான் நாங்கள் கவலைப்படுவோம் என அவருக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஷர்துல் தாகூர்.. நிதீஷ் ரெட்டி.. பிளேயிங் லெவனில் இரண்டு பேரில் யாருக்கு இடம்? – விவரம் இதோ
ஏனெனில் கடந்த காலங்களில் தோல்வியை சந்திப்பீர்கள் என்று அவர் சொன்ன பெரும்பாலான போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதே சமயம் இம்முறை தொடர் சவாலான இங்கிலாந்து மண்ணில் நடைபெறுகிறது. அதனால் இந்திய ரசிகர்கள் கொஞ்சம் கலக்கத்துடனேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.



