IND vs AUS : விளையாட தெரிலைன குறை சொல்லாதீங்க, அதான் டெஸ்ட் கிரிக்கெட் – இந்திய பிட்ச் பற்றி முன்னாள் ஆஸி வீரர் ஆச்சர்ய கருத்து

IND vs AUS Indore Pitch
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா 2004க்குப்பின் தொடரை வெல்லும் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்ட ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் தான் பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு மாதம் முன்பிலிருந்தே வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை இந்தியா உருவாக்கியுள்ளதாக விமர்சித்த ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கிண்டல்களுக்கு உள்ளானது. ஆனால் நாக்பூர் மற்றும் டெல்லியை விட இந்தூரில் முதல் நாளன்றே 4.8 டிகிரி அளவுக்கு அதிகமாக சுழன்ற பிட்ச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்ததால் தற்போது நிறைய இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களுமே சுழலுக்கு சாதகமான மைதானங்களை விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதாங்க டெஸ்ட்:
அத்துடன் முதல் நாளன்று சுழன்ற இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக அறிவித்த ஐசிசி 3 கருப்பு புள்ளிகளையும் தண்டனையாக வழங்கியது. மொத்தத்தில் இந்த தொடரில் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 தரப்பிலுமே தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தரம், பொறுமை, திறமை ஆகிய அனைத்தையும் சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வது போல் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்வதும் ஒரு வகையான சோதனை தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் காஸ்ப்ரோவிக்ஸ் கூறியுள்ளார்.

எனவே அதற்கு உட்பட்டு அதை சிறப்பாக எதிர்கொள்ள தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர பிட்ச்களை விமர்சிக்கக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் 2004ஆம் ஆண்டு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா கடைசியாக டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றியவர். அப்படிப்பட்ட அவர் இது பற்றி தி ஏஜ் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பிட்ச் பற்றி அதிகப்படியான எதிர்பார்ப்புகளை நான் நம்பவில்லை. ஏனெனில் பிட்ச்களை பற்றி அனைத்து பேச்சுகளும் எப்போதும் இந்திய பிட்ச்களை சுற்றியே இருக்கிறது. மேலும் இந்தூரில் கடைசியாக நடைபெற்ற போட்டி காலை நேரத்தில் சில வித்தைகளை வெளிப்படுத்தியது என்று நான் உணர்ந்தேன். ஏனெனில் 9.30 மணிக்கே நீங்கள் போட்டியை துவக்கும் போது அப்போதிருக்கும் ஈரப்பதம் பந்தை சரியாகப் பிடிப்பதற்கு உதவியிருக்கலாம். ஆனால் அப்போட்டியின் எஞ்சிய நாட்களில் அனைவரும் பேசுவது போல் எதுவும் நடைபெறவில்லை”

“பிட்ச் பற்றிய மிகைப்படுத்தலை நம்ப வேண்டாம் என்று நான் கூறும் சமயத்தில் தாறுமாறாக சுழன்றதையும் அறிவேன். அதனால் தான் அதற்கு மோசம் என்று ரேட்டிங் கிடைத்தது. ஆனால் 1998 சுற்றுப்பயணத்தில் பெங்களூரு மைதானத்தில் நின்று நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு உலர்ந்த சிற்றோடை படுக்கை போல் தெரிந்தது. அதில்
புற்கள் இல்லை. ஆனால் அந்த முழு பிட்ச்சிலும் லேசான விரிசல்கள் இருந்தன”

இதையும் படிங்க:மகளிர் ஐபிஎல் 2023 : மும்பை மீண்டும் மிரட்டல் வெற்றி, ஆரம்பத்திலேயே கால்குலேட்டரை கையில் எடுக்கும் ஆர்சிபி ரசிகர்கள்

“எனவே இதில் தான் நாம் விளையாட போகிறோம் என்ற நல்ல அணுகுமுறையுடன் இது போன்ற மைதானங்களில் களமிறங்க வேண்டும். அதை புரிந்து கொண்டு அதற்கு நம்மை உட்படுத்திக் கொண்டு அதற்கேற்றார் போல் நம்மை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அது தான் டெஸ்ட் கிரிக்கெட். அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டிக்கு பின் இந்த கால சூழ்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா தங்களை உட்படுத்திக் கொண்ட காரணத்தாலேயே 3வது போட்டியில் வெல்ல முடிந்தது. ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்கான வழியை கண்டறிந்தனர்” என்று கூறினார்.

Advertisement