இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் முதல் கட்டத்தை தொடர்ந்து இரண்டாம் கட்டப் போட்டிகள் துவங்கிய வேளையில்தான் வீரர்களுக்கு இடையே கொரோனா பரவத்துவங்கியது. முதலில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் மற்றவர்களுக்கும் பரவ துவங்க இந்தத் தொடரை பிசிசிஐ காலவரையின்றி ஒத்தி ஒத்தி வைத்துள்ளது.
இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜிக்கும், பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸ்ஸிக்கும் கொரோனா தொற்று பரவியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கடுமையான கட்டுப்பாடுகளையும் தாண்டி கொரோனா வைரஸ் ஐபிஎல் வீரர்களுக்கு பரவ என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் முதல் கட்டப் போட்டிகள் சென்னை மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெற்ற போது எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் போட்டிகள் அடுத்த இரண்டு மைதானங்களுக்கு மாற்றப்பட்ட போது தான் பயோ பபுள் உடைந்து இருக்கும். இரண்டாவது கட்டப் போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த பயணத்தின் போது தான் பயோ பபுளில் பிளவு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து டெல்லிக்கு மாறும்போது மைதான ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், விமான ஓட்டிகள், பாதுகாப்பு ஊழியர்கள் என பயோ பபுளில் இல்லாத நபர்களுடன் எங்களுக்கு தொடர்பு ஏற்பட்டதால் இந்த ரிஸ்க் ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட பரிசோதனைகள் எனக்கு கொரோனா பாதிப்பின் வீரியம் குறைவாக இருந்ததால் நான் நெகட்டிவ் ரிசல்ட் வரும் தான் என்று நினைத்தேன். ஆனால் பாசிட்டிவாக வந்தது. சில நாட்கள் கழித்து கொரோனா பாதிப்பின் அறிகுறி எனக்குள் இருந்ததை உணர்ந்தேன்.
நான் பௌலிங் கோச் பாலாஜி உடன் பேருந்தில் அமர்ந்து சென்றேன். அவருக்கு நிச்சயம் கொரோனா உறுதி என்றால் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் கட்டுப்பாடுகள் சரியான அளவில் இருந்தாலும் பயோ பபுளில் இல்லாமல் இருந்த சிலருடன் எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த தொடரில் கொரோனா பரவியிருக்கும் என மைக்கல் ஹஸ்ஸி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.