
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று முள்ளான்பூரில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையும் சேர்த்து கடைசியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் விழுந்து கிடக்கிறது. அந்தப் போட்டியில் 220 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 1, ரச்சின் 36 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.
அதிரடியாக விளையாட முயற்சித்த சிவம் துபே 42 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மறுபுறம் மெதுவாக விளையாடிய டேவோன் கான்வே 69* (49) ரன்கள் எடுத்து தடுமாறியதால் 18வது ஓவரில் ரிட்டையர்டு அவுட்டு முறையில் வெளியேறினார். கடைசியில் தோனி 27, ஜடேஜா 9* ரன்கள் எடுத்தும் சென்னை பரிதாபமாக தோற்றது.
இந்நிலையில் அந்தப் போட்டியில் சிவம் துபே அளவுக்கு கான்வே அதிரடியாக விளையாடாததே சென்னையின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் மெதுவாக விளையாடிய கான்வேயை சென்னை மிகவும் தாமதமாக ரிட்டையர்டு அவுட் செய்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி சாவ்லா பேசியது பின்வருமாறு. “கான்வே காற்றில் அடிக்காமல் தரையுடன் அடிக்கக்கூடிய டெக்னிக்கல் பேட்ஸ்மேன்”
“ஆனால் அங்கே தான் சென்னை ட்ரிக்கை தவற விட்டது என்று கருதுகிறேன். ஏனெனில் சிவம் துபே அதிரடியாக பெரிய ஷாட்டுகளை விளையாட முயற்சித்த போது கான்வே முயற்சிக்க கூட இல்லை. மாறாக போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்படி நீங்கள் விரும்பும் போது ரன்ரேட் கை மீறாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். அதை செய்யத் தவறிய கான்வேயை சிஎஸ்கே இன்னும் 2 – 3 ஓவர்கள் முன்பாகவே ரிட்டையர்டு அவுட் செய்திருக்க வேண்டும்”
“ஏனெனில் அவரால் அதிரடியாக விளையாட முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது புதிதாக களத்திற்கு வருபவர் அதிரடியை துவங்குவதற்கு முன் சில பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை காலம் தாமதமாகி அந்த முடிவை எடுத்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார். இது பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: தோனிக்கு எதிராக யுஸ்வேந்திர சாஹலுக்கு ஒரே ஒரு ஓவரை மட்டும் வழங்கியது ஏன்? – ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
“அந்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. களத்தில் நிறைய நேரத்தை செலவிட்டு 69 ரன்கள் எடுத்தால் ஒரு செட்டிலான வீரரை நீங்கள் ரிட்டையர் செய்துள்ளீர்கள். உங்களுக்கு சிக்ஸர்கள் தேவை என்பது எனக்குத் தெரியும். அதற்காக கான்வே சிக்ஸர்கள் அடிக்க மாட்டார் என்று அர்த்தமில்லை. ஒரு கேப்டனாக இது போன்ற முடிவுகள் தான் நீங்கள் வெற்றி பெற்றால் அல்லது தோற்றால் தீர்மானிக்கப்படும்” என்று கூறினார்.