NZ vs IRE : வெறித்தன பேட்டிங், சத்தமே இல்லாமல் அயர்லாந்தை அடித்து நியூஸிலாந்து படைத்த மாஸ் உலகசாதனை

Micheal Bracewell NZ vs IRe
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 10-ஆம் தேதியான நேற்று தலைநகர் டப்ளின் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் போராடி 300/9 ரன்கள் சேர்த்தது. நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் 5 (10) கேப்டன் ஆண்டி பால்பரின் 9 (10) என சொற்ப ரன்களில் அவுட்டானதால் 26/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு ஆண்டி மெக்பிரின் 39 (58) ரன்களில் அவுட்டாகி மேலும் ஏமாற்றினார்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் அட்டகாசமாக பேட்டிங் செய்த குர்ட்டிஸ் கேம்பர் 43 (47) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் அற்புதமாக பேட்டிங் செய்த ஹேரி டெக்டர் 14 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 113 (117) ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் லோர்கன் டூக்கர் 26 (22) ஜார்ஜ் டோக்ர்ல் 18 (14) சிமி சிங் 30* (19) என அதிரடியாக ரன்களை சேர்த்து பினிசிங் கொடுத்தனர். நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக லாக்கி பெர்குசன், இஷ் சோதி, பிளேர் டிக்னெர் தலா 2 விக்கெட்டுகளைக் எடுத்தனர்.

- Advertisement -

திணறிய நியூஸிலாந்து:
அதை தொடர்ந்து 301 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு பின் ஆலன் 6 (9) வில் எங் 1 (3) ஹென்றி நிக்கோலஸ் 7 (10) கேப்டன் டாம் லாதம் 23 (25) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அயர்லாந்தின் அட்டகாசமான ஆரம்பகட்ட பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 83/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற தனது அணியை காப்பாற்ற போராடிய மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 51 (61) ரன்களிலும் கிளென் பிலிப்ஸ் 38 (53) ரன்களிலும் போராடி அவுட்டானதால் நியூசிலாந்தின் தோல்வி உறுதியென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது களமிறங்கிய ஆல்-ரவுண்டர் மைக்கேல் ப்ரேஸ்வெல் விக்கெட்டுக்கள் விழுவதையும் பொருட்படுத்தாமல் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது அணியின் வெற்றிக்காக போராடத் துவங்கினார். ஆனால் இஷ் சோதி 25 (35) மாட் ஹென்றி 0 (8) என எதிர்ப்புறம் அந்த வீரர்கள் அவருக்கு கை கொடுக்காமல் பெவிலியன் திரும்பியதால் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்தின் வெற்றி அவ்வளவுதான் என்று நினைக்கப்பட்டது.

- Advertisement -

மிரட்டிய ப்ரேஸ்வெல்:
இருப்பினும் மறுபுறம் அசராமல் தனி ஒருவனாக அட்டகாசமாக பேட்டிங் செய்து சதத்தை கடந்த மைக்கேல் பிரேஸ்வெல் வெற்றிக்காக தொடர்ந்து போராடினார். அந்த சமயத்தில் அவருக்கு கை கொடுத்துக் கொண்டிருந்த லாக்கி பெர்குசன் 8 (13) ரன்களில் 49-வது ஓவரில் அவுட்டானதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 1 விக்கெட் மட்டுமே நியூசிலாந்திடம் இருந்தது. நல்லவேளையாக கிரேக் எங் வீசிய 50-ஆவது ஓவரில் முதல் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு ப்ரேஸ்வெலுக்கு கிடைத்தது.

ஆனால் 20 ரன்களை எங்கே அடித்து விடப்போகிறார் என்ற எண்ணத்துடன் கிரைக் எங் வீசிய அவுட் சைட் ஆஃப் பந்தை வீசிய ஆஃப் சைட் ஒதுங்கி வந்து முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்கவிட்ட பிரேஸ்வெல் அடுத்த பந்தில் பவுண்டரியையும் 3-வது பந்தில் மெகா சிக்ஸரையும் பறக்கவிட்டார். இருப்பினும் கொஞ்சம் புதிதாக மாற்றி வீசலாம் என்று நினைக்காத கிரைக் எங் திரும்பத் திரும்ப அதே மாதிரியான பந்துகளை வீசியதை பயன்படுத்திய பிரேஸ்வெல் 4-வது பந்தில் பவுண்டரியை அடித்து 5-வது பந்தில் மைதானத்திற்கு வெளியே பிரம்மாண்ட சிக்சரை பறக்கவிட்டு ஒரு பந்து மீதம் வைத்த நியூசிலாந்துக்கு வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மாஸ் உலகசாதனை:
அதனால் கையிலிருந்த வெற்றியை மோசமான ஒரே ஓவரில் எதிரணிக்கு பரிசளித்த அயர்லாந்து சொந்த மண்ணில் தலை குனிந்தது. மறுபுறம் எதிர்பாராத வெற்றியை பெற்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து 127* (82) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய மைக்கேல் ப்ரேஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதைவிட இப்போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது அதை 4, 4, 6, 4, 6 என 24 ரன்களை விளாசி வெற்றிகரமாக துரத்திய நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : பொறுப்பட்ட பேட்டிங், இளம் இந்திய வீரரை விளாசும் ரசிகர்கள் – நடந்தது இதோ?

இதற்கு முன் கடந்த 1987இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 18 ரன்களை இங்கிலாந்து வெற்றிகரமாக எட்டிப்பிடித்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியை உன்னிப்பாக கவனித்த இந்திய ரசிகர்கள் இப்போட்டியை பார்க்காத நிலையில் சத்தமே இல்லாமல் நியூசிலாந்து அற்புதமாக செயல்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

Advertisement