இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் இடையே தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓய்வினை அறிவித்ததால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக மாபெரும் மூன்று வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை தந்தது.
கே.எல் ராகுல் இளம் வீரர்களுக்கு ஒரு தந்தை மாதிரி : மைக்கல் வாகன்
அதன்பின்னர் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அப்படி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி எவ்வாறு அனுபவ வீரர்கள் இன்றி இந்த தொடரில் விளையாடப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இவ்வேளையில் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இதுவரை இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 5 சதங்களை பதிவு செய்துள்ள இந்திய அணி கிட்டத்தட்ட 840 ரன்களை அடித்துள்ளது. இந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் தற்போதைக்கு அனுபவ வீரராக கே.எல் ராகுல் மட்டுமே இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 247 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த கே.எல் ராகுலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் : கே.எல் ராகுல் தற்போதைய இளம் இந்திய அணிக்கு ஒரு தந்தை போன்றவர் என்று வித்தியாசமான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இளம் வீரர்களை கொண்ட தற்போதைய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் தந்தையை போன்ற ஒரு வீரர்.
இதையும் படிங்க : அம்பயர் மேலயே கோவத்தை காமிக்கிறீங்களா? ரிஷப் பண்டை கண்டித்த ஐ.சி.சி – என்ன நடந்தது?
ஏனெனில் தற்போதைய இளம் அணியில் அவர் மட்டுமே நல்ல அனுபவம் உடைய வீரராக இருக்கிறார். அவரைச் சுற்றி இளம் வீரர்கள் இருப்பதினால் பேட்டிங் வரிசைக்கு அவரே ஒரு மிகப்பெரிய தூணாக நிற்கிறார். அவரை சுற்றி மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உரித்தான டெக்னிக்குடன் கே எல் ராகுல் ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக எதிர் கொள்கிறார். அவரைப் போன்ற ஒரு வீரர் ஒவ்வொரு அணிக்கும் தேவை என மைக்கேல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.



