ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை மோசமான ஒரு தொடரை சந்தித்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 10 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது.
தல தோனி தான் சி.எஸ்.கே அணியின் ராஜா : மைக்கல் கிளார்க்
இந்த தொடரின் ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த வேளையில் தொடரின் பாதியிலேயே அவர் காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் தோனியின் தலைமையில் செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது தலைமையிலும் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததால் இந்த சீசனில் சி.எஸ்.கே அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய சரிவை சிஎஸ்கே அணி சந்தித்திருந்ததால் ரசிகர்களும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 43 வயதான சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது. ஏற்கனவே தனது ஓய்வு குறித்து பேசிய தோனி : இன்னும் ஓய்வு குறித்த முடிவை எடுப்பதற்கு நிறைய நேரமுள்ளது என்றும் தற்போது எதையும் உறுதியாக கூறமுடியாது என்றும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்று தோனியும் அடுத்த சீசனில் விளையாட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி இருப்பதனாலே தற்போது ஐபிஎல் தொடருக்கு நிறைய ஸ்பான்சர்கள் இருக்கிறார்கள். அவர்தான் சிஎஸ்கே அணியின் ராஜா அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க : ரோஹித், சுப்மன் கில்லை தாண்டி ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கவிருக்கும் ஜாக்பாட் – விவரம் இதோ
ஒவ்வொரு முறை சென்னை அணி வெளியூரில் விளையாடும் போது அந்த அணியை காட்டிலும் சிஎஸ்கே அணிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணம் தோனி தான். ஒருவேளை தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்தால் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.



