
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டியில் மட்டுமே விளையாடினார். ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக பணிச்சுமை காரணமாக அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று நிர்வாகம் அறிவித்த வேளையில் அந்த வகையிலேயே அவரும் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடி இருந்தார்.
அவர் விளையாடாத இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டை முகமது சிராஜ் தலைமை தாங்கி வழி நடத்தினார். அப்படி பும்ரா இல்லாமல் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த விடயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு மற்ற பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த விடயம் அற்புதமான ஒன்று.
இந்திய வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இல்லாமல் இந்திய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது. இதன் காரணமாக மற்ற பந்துவீச்சாளர்களையும் நாம் பாராட்டியாக வேண்டும். பும்ரா இல்லாமலும் எங்களால் வெற்றிபெற முடியும் என்று இந்திய பந்துவீச்சாளர்கள் காண்பித்துள்ளார்கள்.
இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் அசத்திய வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கவுள்ள பிரமோஷன் – விவரம் இதோ
பும்ரா எந்த அணியில் இருந்தாலும் நிச்சயம் அந்த அணி பலமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் இல்லாமலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது அற்புதமாக பந்து வீசினர் என மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.