இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றிருந்த தமிழக ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்து இந்திய அணியை அந்த போட்டியில் டிராவிற்கு அழைத்துச் சென்றார். தேவைப்படும் போது விக்கெட்டுகளை வீழ்த்தும் அவர் தற்போது பேட்டிங்கிலும் சதம் விளாசியுள்ளதால் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கவுள்ள பிரமோஷன் :
ஏற்கனவே இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்தாலும் அவருக்கான நிலையான வாய்ப்பு இதுவரை கிடைக்காமல் இருந்து வந்தது. ஆனால் அண்மையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் இனி அவருக்கு தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சவாலான இந்த தொடரில் இரண்டு துறைகளிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு இனி தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங் ஆர்டரில் ப்ரோமோஷன் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் மீது நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரின் போது அவர் மூன்றாவது வீரராக களமிறக்க திட்டம் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. அப்படி வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது வீரராக பேட்டிங் செய்யும்போது கூடுதலாக குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டுவர முடியும்.
அப்படி குல்தீப் யாதவும் அணிக்குள் வந்தால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என இந்தியாவின் பந்துவீச்சு பலம் அதிகரிக்கும். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இந்தியாவில் இந்த காம்பினேஷனை விளையாட வைக்க நிர்வாகம் விரும்புகிறது.
இதையும் படிங்க : பண்ட், வோக்ஸ் மட்டுமில்ல.. இன்னொரு பிளேயரும் உடைஞ்ச விரலோடு கடைசி டெஸ்ட்டில் ஆடுனாராம் (விவரம் இதோ)
எனவே எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மூன்றாவது இடத்தில் களமிறங்கினாலும் ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே தமிழ்நாடு அணிக்காக அவர் துவக்க வீரராக கூட விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



