ஐபிஎல் 2022 தொடரில் மே 29-ஆம் தேதி நடைபெற்ற 69-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 159/7 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் 5 (6) மிட்சேல் மார்ஷ் 0 (1) ஆகிய நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஏமாற்றிய நிலையில் பிரிதிவி ஷா 24 (23) சர்பராஸ் கான் 10 (7) என இளம் வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்காமல் கைவிட்டனர்.
அதனால் 50/4 என திணறிய அந்த அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (33) ரன்கள் ரோவ்மன் போல் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 43 (34) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி நிலையில் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் 19* (10) ரன்கள் விளாசினார். மும்பை சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
மும்பை வெற்றி:
அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (35) ரன்களும் தேவாலட் ப்ரேவிஸ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 (33) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அப்போது வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 59 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கி முதல் பந்திலேயே எட்ஜ் வாங்கிணாலும் ரிஷப் பண்ட் ரிவ்யூ எடுக்காமல் கோட்டை விட்டதை பயன்படுத்தி 2 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்ட டிம் டேவிட் 34 (11) ரன்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.
கடைசியில் திலக் வர்மா 21 (17) ரன்களும் ரமன்தீப் சிங் 13* (6) ரன்களும் எடுக்க 19.1 ஓவரில் 160/5 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் பந்துவீச்சில் ஆன்றிச் நோர்ட்ஜெ, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.
பெங்களூரு கொண்டாட்டம்:
முன்னதாக புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருந்த பெங்களூரு இப்போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் ரசிகர்களும் மும்பைக்கு ஆதரவு கொடுத்தனர். இறுதியில் எதிர்பார்த்தது போலவே மும்பை வெற்றி பெற்றதால் டெல்லியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகளை தொடர்ந்து 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் காரணத்தால் நேற்று இரவு விராட் கோலி உட்பட அனைத்து பெங்களூரு வீரர்களும் ரசிகர்களும் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் தொடர் தோல்விகளால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த போதிலும் எங்களுக்காக இப்படி போராடி வெற்றியை பெற்று கொடுத்ததற்கு நன்றி என விராட் கோலி உட்பட அனைத்து பெங்களூரு அணி வாசிகளும் மும்பைக்கு மனதார நன்றியை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கூட பங்கேற்ற 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளைச் சந்தித்தது மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து அவமானத்தைச் சந்தித்தது.
பரிசல்ல, பகைக்கு பழி:
ஆனாலும் தங்களது வெற்றியால் பெங்களூருவுக்கு பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை மும்பை பரிசளித்தது அனைவரையும் நெகிழ செய்தது. ஆனால் உண்மையான பின்னணி என்னவெனில் இந்த வெற்றி பெங்களூருவுக்காக பரிசளிக்கப்பட்ட வெற்றி கிடையாது. டெல்லி மீதான 4 வருட பகையை பழிதீர்த்துக்கொண்ட மும்பையின் வெற்றியாகும். ஆம் கடந்த 2018 ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை முதல் 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து 5-வது இடத்தில் தற்போது பெங்களூரு போலவே தத்தளித்தது.
அதிலும் தனது லீக் போட்டியில் டெல்லிக்கு எதிராக களமிறங்கிய அந்த அணி அதில் வென்றால் மட்டுமே 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற தற்போதைய டெல்லி சந்தித்த அதே நிலைமையில் தவித்தது. ஆனால் தற்போதைய மும்பை போலவே ஏற்கனவே தொடர் தோல்விகளால் விளையாடும் வாய்ப்பை இழந்து கடைசி இடத்தை பிடித்திருந்த டெல்லி மும்பைக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல விடாமல் தடுத்தது.
இதையும் படிங்க : கேப்டனாக பண்ட் செய்த 2 தவறின் பரிசாக டெல்லி தோல்வி – இதை கவனிச்சீங்களா? (என்ன நடந்தது?)
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ரிஷப் பண்ட் 64 (44) விஜய் சங்கர் 43* (30) ஆகியோர் அதிரடியில் 174/4 ரன்கள் சேர்த்தது. அதைத் துரத்தி மும்பைக்கு எவின் லெவிஸ் 48 (31) ரன்களும் பென் கட்டிங் 37 (20) ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் சொதப்பியதால் 19.3 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. அந்த வகையில் தற்போது அதே போலவே அதே கடைசி இடத்தைப் பிடித்த மும்பை அதே சூழ்நிலையில் தவித்த டெல்லியை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல விடாமல் பழி தீர்த்து மாஸ் காட்டியுள்ளது என்றே கூறலாம்.



