இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்களில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 14 வது சீசன் ஆனது தற்போது வீரர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் எஞ்சியுள்ள 31 போட்டிகள் செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே திட்டமிட்டு அதற்கான அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு 14வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் எனவும் அந்த அணிகளுக்கான ஏலம் மற்றும் ஏலத்தொகை ஆகியவை கொண்ட தகவலை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் சரியான முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற விதிமுறையின் அடிப்படையில் தற்போது தங்கள் அணியில் உள்ள முன்னணி வீரர்களை தக்க வைக்கும் பட்டியலை ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மும்பை அணியில் எந்த 4 வீரர்களை தக்க வைக்கப் போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஏலத்தில் மும்பை அணி முதலில் தக்க வைக்க நினைப்பது ரோகித் சர்மா தான். மும்பை அணிக்காக நான் ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஓப்பனராக சிறப்பாக விளையாடி வருவதால் அவரை நிச்சயம் அணியில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதனைத் தொடர்ந்து தக்க வைக்க நினைப்பது ஹார்டிக் பாண்டியா தான். மும்பை அணியின் ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் தனது சரியான திறனை வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கையில் அவரை தக்க வைக்க நினைக்கிறது.
பொல்லார்ட் : மும்பை அணியின் துணை கேப்டன் ஆன இவர் பல போட்டிகளில் மும்பை அணிக்காக வெற்றி பெற்று கொடுத்தது மட்டுமின்றி 2010ஆம் ஆண்டு முதல் இவர் மும்பை அணிக்காக மட்டுமே விளையாடி வருவதால் அவரை அணியில் தக்கவைக்க அவர்கள் யோசித்து உள்ளனர். அதுமட்டுமின்றி 4-வது வீரராக ஜஸ்பிரித் பும்ராவை தக்கவைக்க நினைக்கின்றனர்.
மும்பை அணிக்காக அறிமுகமான இவர் ஐபிஎல் தொடர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் மும்பை அணியிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு வீரர்களே மும்பை அணிக்காக அடுத்த ஆண்டு ஏலத்தில் தக்க வைக்கப்படும் வீரர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.